என் மலர்
துலாம்
2025 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்
பஞ்சம ஸ்தானத்தில் ராகு நெஞ்சம் மகிழும் வாழ்வு!
துலாம் ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகுபகவான், 26.4.2025 அன்று 5-ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரப்போகிறார். கேது பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்திற்கு வருகிறார். சுமார் 1½ ஆண்டு காலம் ராகுவும், கேதுவும் அதே இடத்தில் சஞ்சரித்து அங்குள்ள நட்சத்திர பாத சாரங்களுக்கேற்ப பலன்களை வழங்குவார்கள்.
5-ம் இடத்திற்கு ராகு வருவதால், பிள்ளைகளால் பெருமை சேரும். பிரச்சினைகள் படிப்படியாக குறையும். திருமண முயற்சிகள் கைகூடும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவுக்கு வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறும். உத்தியோகத்தில் ஏற்படும் மாறுதல் திருப்தி தராது. சென்ற இடம் மனதிற்கு பிடிக்காமல் மீண்டும் பழைய இடத்திற்கே வரும் வாய்ப்பு உண்டு. எதிர்கால திட்டங்கள் எளிதில் நிறைவேறும்.
லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் எதிர்பார்த்ததை காட்டிலும், கூடுதல் லாபம் கிடைக்கும். சமூகத்தில் உயர்நிலையில் உள்ளவர்களின் ஆதரவோடு, பல நல்ல காரியங்களை செய்வீர்கள். வாங்கிய கடனை கொடுத்து மகிழ்வீர்கள்.
குரு சாரத்தில் ராகு சஞ்சாரம் (26.4.2025 முதல் 31.10.2025 வரை)
பூரட்டாதி நட்சத்திரக் காலில் குருவின் சாரத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் பொழுது, உடன்பிறப்புகளின் வழியில் ஒரு சில பிரச்சினைகள் வந்து அலைமோதும். உத்தியோகத்திலும் பிரச்சினைகள் வரலாம். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு, குருபகவான் பகைக் கிரகமாவார். அவரது காலில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, மிக மிக கவனத்தோடு இருக்க வேண்டும். வீண் பழிகளுக்கு ஆளாக நேரிடும்.
சூரிய சாரத்தில் கேது சஞ்சாரம் (26.4.2025 முதல் 27.6.2025 வரை)
உத்ரம் நட்சத்திரக் காலில் சூரிய சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, மிகமிக கவனமாக செயல்பட வேண்டும். எதிர்காலத்தை பற்றிய பயம் அதிகரிக்கும். எதையும் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு இருந்தாலும், கொடுக்கல்- வாங்கலில் தடுமாற்றம் ஏற்படும்.
ஒரு தொகை செலவழிந்த பின்னரே, அடுத்த தொகை உங்கள் கரங்களில் புரளும். தொழில் பங்குதாரர்களால் சில பிரச்சினைகள் வரலாம். குடும்பத்தில் குழப்பம் அதிகரிக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
சுக்ர சாரத்தில் கேது சஞ்சாரம் (28.6.2025 முதல் 5.3.2026 வரை)
பூரம் நட்சத்திரக் காலில் சுக்ர சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, அற்புதமான பலன்கள் வந்து சேரும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் நீங்கள் கேட்ட சலுகைகள் கிடைக்கும். உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்தை கண்டு ஆச்சரியப்படுவர்.
அலுவலகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும். ஜாமீன் கையெழுத்து போட்டு வாங்கிக் கொடுத்த பணம், திரும்பி வருவதற்கான அறிகுறி தென்படும். சுப காரியங்கள் நடைபெறும் சூழ்நிலை உண்டு. தொழிலில் புதிய பங்குதாரர்களை இணைத்துக் கொண்டு செயல்படுவீர்கள்.
சனிப்பெயர்ச்சி காலம்
6.3.2026 அன்று சனி பகவான், மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திற்கு சனி வரும் பொழுது, ஜீவன ஸ்தானம் பலப்படுகிறது. எனவே தொழில் மற்றும் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றங்கள் கிடைக்கும். தனித்தனி இடங்களில் வேலை பார்த்து வந்த தம்பதியர் இப்பொழுது ஒரே இடத்தில் இருந்து பணிபுரிய வாய்ப்பு உருவாகும்.
'படித்து முடித்த பிள்ளைகள் வேலை இல்லாமல் இருக்கிறார்களே' என்ற கவலை மறையும். அடுத்தடுத்து நல்ல சம்பவங்கள் பலவும் நடைபெறும் நேரம் இது. உத்தியோகத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று கொண்டு, சுய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். சனிக்குரிய சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டால் மேலும் நன்மைகளைப் பெறலாம்.
குருப்பெயர்ச்சி காலம்
ராகு- கேது பெயர்ச்சி காலத்தில் குருப்பெயர்ச்சி நிகழ்கிறது. 11.5.2025 அன்று குரு பகவான், மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அப்பொழுது அதன் பார்வை பலனால் உங்கள் ராசி புனிதப்படுகிறது. எனவே ஆரோக்கியம் சீராகும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். செல்வாக்கு உயரும். திடீர் முன்னேற்றம் வந்து சேரும். சகோதர ஒற்றுமை பலப்படும்.
பூர்வீக சொத்து சம்பந்தமாக நடைபெற்று வந்த பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். அக்டோபர் 8-ந் தேதி குரு பகவான், அதிசாரமாக கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அப்பொழுது குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். இடம் வாங்கி வீடு கட்டும் யோகம் உண்டு. உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.






