என் மலர்tooltip icon

    துலாம்

    2024 கார்த்திகை மாத ராசிபலன்

    இனிமையாகப் பேசினால் எதையும் முடிக்கலாம் என்று சொல்லும் துலாம் ராசி நேயர்களே!

    கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் வெற்றிகள் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அதே சமயம் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் குருபகவான் சஞ்சரிக்கிறார்.

    அஷ்டமத்து குருவின் ஆதிக்கத்தால் அலைச்சல் அதிகரிக்கும். ஆதாயம் குறைவாக கிடைக்கும். 'உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். ஊர் மாற்றம், இடமாற்றம், உத்தியோக மாற்றம் வந்தாலும் அதை உபயோகப்படுத்திக் கொள்ள இயலாது.

    குரு வக்ரம்

    ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான், இந்த மாதம் முழுவதும் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குரு, வக்ரம் பெறும்பொழுது சகோதர ஒற்றுமை பலப்படும். தக்க விதத்தில் முன்னேற்றம் கிடைக்கும். உத்தியோகத்தில் நினைத்த இடத்திற்கு மாறுதல் வந்து நெஞ்சம் மகிழ வைக்கும். வழக்குகள் சாதகமாக முடியும். வாய்தாக்கள் ஓயும்.

    இழப்புகளை ஈடுசெய்ய புதிய நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். உத்தியோகத்தில் உள்ள சிலர், விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு வெளியில் வந்து 'சுயதொழில் செய்யலாமா?' என்று சிந்திப்பர். திருமண முயற்சி கைகூடும். திரும்பிச் சென்ற வரன்கள் மீண்டும் வரலாம்.

    சனி - செவ்வாய் பார்வை

    கடகத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், இந்த மாதம் முழுவதும் கும்பத்தில் உள்ள சனியைப் பார்க்கிறார். இந்த முரண்பாடான கிரகங்களின் பார்வை அவ்வளவு நல்லதல்ல. உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். எனவே தன வரவில் தடுமாற்றம், இனத்தார் பகை, எதிர்காலத்தைப் பற்றிய பயம், ஆரோக்கிய குறை, பிள்ளைகளால் தொல்லை என்று அத்தனை வழிகளிலும் நிம்மதி இழக்கும் சூழ்நிலை உருவாகலாம். எனவே இதுபோன்ற காலங்களில் குலதெய்வ வழிபாடும், இஷ்ட தெய்வ வழிபாடும், தெசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடும் குறுக்கீடு சக்திகளை அகற்றும்.

    மகர - சுக்ரன்

    கார்த்திகை 18-ந் தேதி, மகர ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், அஷ்டமாதிபதியாகவும் விளங்கும் சுக்ரன் மகரத்திற்கு வரும்பொழுது, இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் கேட்ட சலுகைகளைக் கொடுப்பர்.

    ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. குடும்பப் பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். வாகனங்களை மாற்ற வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு அந்த முயற்சி கைகூடும்.

    செவ்வாய் வக்ரம்

    கடக ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய், கார்த்திகை 18-ந் தேதி வக்ரம் பெறுகிறார். இது உங்களுக்கு அதிக கவனம் தேவைப்படும் காலமாகும். மனோபலம் குறையும். மதிப்பை தக்க வைத்துக்கொள்வது அரிது. வாங்கிய இடத்தால் பிரச்சினைகள் அதிகரிக்கும். வளர்ச்சியில் குறுக்கீடுகள் வரலாம்.

    பணப்பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகையால் பிரச்சினைகள் அதிகரிக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகளில் தடை வரலாம். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர் களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது.

    உத்தியோகத்தில் உள்ளவர்கள், வீண் பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும். கலைஞர்களுக்கு எதிர்பார்ப்புகள் ஓரளவு நிறைவேறும். மாணவ - மாணவிகளுக்கு மறதி அதிகரிக்கலாம். பெண்களுக்கு நிழல்போலத் தொடர்ந்த கடன்சுமை குறையும். நினைத்ததை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படலாம்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    நவம்பர்: 18, 19, 23, 24, 30, டிசம்பர்: 1, 2, 7, 8.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.

    ×