என் மலர்tooltip icon

    சிம்மம்

    2025 புரட்டாசி மாத ராசிபலன்

    சிம்ம ராசி நேயர்களே!

    புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியிலேயே சுக்ரனும், கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். சப்தம ஸ்தானத்தில் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். எனவே ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கும். உணவில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது. கும்பத்தில் ராகு இருப்பதால் பொருளாதார நிலை திருப்தி தரும். கொடுக்கல் - வாங்கல்களில் பிரச்சினைகள் ஏற்படும். மனதில் இனம்புரியாத கவலை மேலோங்கும். வீண் விரயங்களில் இருந்து விடுபட சுபச் செலவுகளை செய்வது நல்லது.

    துலாம் - புதன்

    புரட்டாசி 13-ந் தேதி துலாம் ராசிக்குப் புதன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சகாய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் நல்ல நேரம்தான். வெற்றிச் செய்திகள் வீடுதேடி வரும். உடன் பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வார்கள். அவர்களோடு ஏற்பட்ட பனிப்போர் அகலும். சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக முடியும். தொழில் நடத்துபவர்கள் 'புதிய பங்குதாரர்களை சேர்த்துக் கொள்ளலாமா?' என்பது பற்றி சிந்திப்பர். அதிக மூலதனம் போடுவதற்காக, கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் மீண்டும் வந்து இணைவர். வீடு வாங்கும் யோகம் அல்லது இடம் வாங்கும் யோகம் உண்டு. உடல்நலம் சீராக, மாற்று மருத்துவம் கைகொடுக்கும்.

    கடக - குரு

    புரட்டாசி 22-ந் தேதி, கடக ராசிக்கு குரு அதிசார கதியில் செல்கிறார். அங்கு செல்லும் குரு பகவான் உச்சமும் பெறுகிறார். உங்கள் ராசிக்கு விரய ஸ்தானத்தில் குரு உச்சம் பெறுவதால், சுப விரயங்கள் அதிகரிக்கும். திருமண வயதடைந்த பிள்ளைகள் இருந்தால் அவர் களின் கல்யாண வாய்ப்புகள் கைகூடும். பெற்றோரின் மணிவிழாக்கள், பவளவிழாக்கள் சிறப்பாக நடைபெற வழிபிறக்கும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். பழைய வாகனத்தைக் கொடுத்து விட்டு, புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    குருவின் பார்வைக்கு அதிக பலன் உண்டு. அந்த அடிப்படையில் பார்க்கும்பொழுது, கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். கடமையில் இருந்த தொய்வு அகலும். தாய் வழி ஆதரவு உண்டு. பிறரை சார்ந்திருப்பவர்கள் தன்னிச்சையாக இயங்கக்கூடிய நேரம் இது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகள், வேண்டிய சலுகைகளைக் கொடுப்பர். இலாகா மாற்றம் எதிர்பார்த்தபடி அமையும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். 'உத்தியோகத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே' என்று நினைத்தவர்களுக்கு, புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    சனி வக்ரம்

    கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 6, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. கண்டகச் சனி வக்ரம் பெறுவது நன்மைதான். என்றாலும் குடும்பப் பிரச்சினைகள் கூடுதலாக இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. எதிரிகளின் பலம் கூடும். தொழிலில் லாபம் வந்தாலும், அது கைக்கு கிடைப்பது அரிது. முன்னேற்றப் பாதையில் சில குறுக்கீடுகள் வரத்தான் செய்யும். அவற்றில் இருந்து விடுபட சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து சனி கவசம் பாடி, சனி பகவானை வழிபடுவது நல்லது.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகளில் மாற்றம் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர் களுக்கு நல்ல வாய்ப்புகள் கைநழுவிச் செல்லும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளால் நன்மை உண்டு. கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு கொடுக்கல் - வாங்கல் சிறப்பாக இருக்கும். சுபச்செலவு அதிகரிக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 17, 22, 26, 27, அக்டோபர்: 8, 9, 13, 14.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

    ×