என் மலர்tooltip icon

    சிம்மம்

    2025 மார்கழி மாத ராசிபலன்

    சிம்ம ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு யோகாதிபதி செவ்வாயும் இணைந்திருக்கிறார். எனவே சென்ற மாதத்தைக் காட்டிலும் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். அதே நேரம் ஜென்மத்தில் கேதுவும், 7-ல் ராகுவும் இருப்பதால், தொழிலில் குறுக்கீடுகள் வந்து கொண்டுதான் இருக்கும். தைரியமும், தன்னம்பிக்கையும் மிக்க நீங்கள், அதை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்க நிலை மாற, சர்ப்ப கிரகங்களுக்குரிய தெய்வங்களை யோகபலம் பெற்ற நாளில் சென்று வழிபடுவது நல்லது.

    மிதுன - குரு

    மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குருபகவான் வக்ர இயக்கத்தில் செல்கிறார். அப்பொழுது அவரது பார்வை பதியும் இடங்கள் யாவும் புனிதமடைந்து நற்பலன் தரும். உங்கள் ராசிக்கு பஞ்சம - அஷ்டமாதிபதியானவர் குரு. அவரது பார்வை பலத்தால் சகோதர ஒற்றுமை பலப்படும். வழக்குகள் சாதகமாக முடியும். ஆடம்பரச் செலவுகளால் கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட, புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு உருவாகும். அலுவலகத்தில் உங்கள் மரியாதை கூடும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டு. திருமண வயதை எட்டிய பிள்ளைகளுக்கு நல்ல வரன் வந்துசேரும்.

    இதுவரை தடைப்பட்ட சில காரியங்கள் இப்பொழுது துரிதமாக நடைபெறும். வியாபாரத்தில் உள்ள நெளிவு சுளிவுகளை கற்றுக்கொண்டு, அதை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். இதுவரை பகையாக இருந்த உறவினர்கள், உங்களைத் தேடி வந்து பாசம் காட்டுவர். அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு மக்களின் செல்வாக்கு அதிகரிக்கும். மகத்தான பொறுப்புகள் கிடைக்கும். கடல்தாண்டிச் சென்று பணிபுரிபவர்களுக்கு அங்கு 'குடியுரிமை கிடைக்கவில்லையே' என்ற கவலை அகலும். இடம் வாங்கும் யோகம் உண்டு. புதிய கூட்டாளிகள் மூலம் தொழில் முன்னேற்றம் காணும் நேரம் இது.

    தனுசு - சுக்ரன்

    மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் பஞ்சம ஸ்தானத்திற்கு செல்லும்போது, பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினை அகலும். வாழ்க்கையில் புதிய பாதை புலப்படும். முன்னேற்றத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். செய்தொழிலில் மேன்மை உண்டு. புதிய ஆபரணங்கள் வாங்கி மகிழும் வாய்ப்பு கிட்டும். பிள்ளைகளின் வேலை சம்பந்தமாக எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவோடு நல்ல காரியங்கள் நடைபெறும்.

    மகர - செவ்வாய்

    மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார்். உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகம் செவ்வாய் என்பதால் இக்காலம் ஒரு பொற்காலமாகவே அமையும். சொத்துக்களால் ஆதாயம் உண்டு. தங்களின் வியாபார தலத்தை வேறு ஒரு புதிய இடத்திற்கு மாற்ற முயற்சிப்பீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முன்னேற்றப் பாதையில் செல்ல வழிவகுத்துக் கொடுப்பர். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூடும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு புதிய கூட்டாளிகள் வந்திணைவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு உண்டு. கலைஞர்களுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும். மாணவ - மாணவிகளுக்கு, ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு நினைத்தது நிறைவேறும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    டிசம்பர்: 17, 18, 19, 29, 30, ஜனவரி: 3, 4, 10, 11.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிரே.

    ×