என் மலர்tooltip icon

    சிம்மம்

    2025 ஐப்பசி மாத ராசிபலன்

    சிம்ம ராசி நேயர்களே!

    ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் நீச்சம் பெற்று வலுவிழந்து சஞ்சரிக்கிறார். வக்ரச் சனியின் பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. சர்ப்ப கிரகங்களின் ஆதிக்கமும் மேலோங்கி இருக்கிறது. எனவே ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். அதன் விளைவாக மருத்துவச் செலவு கூடும். 'திறமை இருந்தும் எதையும் செய்ய இயலவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. வளர்ச்சி ஏற்பட்டாலும் விரயங்கள் அதிகரிக்கும்.

    உச்சம் பெற்ற குரு

    மாதத் தொடக்கத்தில் குரு கடக ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். முறையான பெயர்ச்சி இல்லாமல் அதிசாரப் பெயர்ச்சியாக இருந்தாலும் அதைப் பார்க்கும் இடங்கள் புனிதமடைகின்றன. எனவே விரயங்கள் அதிகரிக்கும். அதைச் சுபவிரயமாக மாற்றிக்கொள்வது நல்லது. தாயின் உடல்நலம் சீராகும். பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி கைகூடும். பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாகவோ, கல்யாணம் சம்பந்தமாகவோ, கடல் தாண்டிச் சென்று பணிபுரிவது சம்பந்தமாகவோ, ஏதேனும் முயற்சி செய்தால் அதில் வெற்றி கிடைக்கும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும்.

    சனி - ராகு சேர்க்கை

    மாதம் முழுவதும் சப்தம ஸ்தானத்தில் சனியும், ராகுவும் சேர்க்கை பெற்றிருக்கிறார்கள். இது அவ்வளவு நல்லதல்ல. எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. வாழ்க்கைத் துணை வழியே பிரச்சனைகள் மற்றும் குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நிலை தொல்லை ஏற்பட்டு மனக்கவலை அதிகரிக்கும். உத்தியோகமாக இருந்தாலும், தொழிலாக இருந்தாலும் முறையாக அதில் கவனம் செலுத்த இயலாமல் தவிப்பீர்கள். இதுபோன்ற நேரங்களில் குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவது நல்லது. பலரின் மனக்கசப்பிற்கு ஆளாக நேரிடும்.

    விருச்சிக - செவ்வாய்

    ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சுக ஸ்தானத்தில் பலம்பெறும் இந்த நேரம், ஒரு அற்புதமான நேரமாகும். சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும். இடம், வீடு வாங்கும் யோகம் உண்டு. தாய் - தந்தையரின் ஒத்துழைப்பு கிடைக்கும். பூர்வீகச் சொத்துக்களால் லாபமும், புதிய முயற்சிகளில் வெற்றியும் கிடைக்கும் நேரம் இது.

    துலாம் - சுக்ரன்

    ஐப்பசி 17-ந் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சகாய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம், அமைதியான வாழ்க்கைக்கு அடிகோலும் விதத்தில் சம்பவங்கள் நடைபெறும். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். முக்கியப் புள்ளிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பர். கட்டிய வீட்டைப் பழுது பார்க்கும் யோகம் உண்டு.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புகழ் கூடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு ஒப்பந்தங்கள் வந்துசேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இலாகா மாற்றம் ஏற்படலாம். கலைஞர்களுக்கு கணிசமான தொகை கைகளில் புரளும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் கவனம் தேவை. பெண்களுக்கு குடும்பச்சுமை கூடும். கொடுக்கல் - வாங்கல்களில் நிதானம் தேவை.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    அக்டோபர்: 20, 21, 25, நவம்பர்: 8, 9, 15, 16.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.

    ×