என் மலர்tooltip icon

    சிம்மம்

    2025 சித்திரை மாத ராசிபலன்

    எதையும் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே!

    விசுவாவசு வருட புத்தாண்டின் சித்திரை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சூரியன் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். ஆயினும் அஷ்டம ஸ்தானம் வலுப்பெற்றிருக்கிறது. மேலும் கண்டகச் சனியின் ஆதிக்கம் உள்ளதால், எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது.

    திடீர் திடீரென மனக்குழப்பம் ஏற்பட்டு, பல காரியங்கள் பாதியிலேயே நிற்கலாம். சொந்தங்களாலும், சொத்துக் களாலும் பிரச்சினை அதிகரிக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கை நழுவிச் செல்லலாம். ஆரோக்கியத் தொல்லையும், மருத்துவச் செலவும் உண்டு. சனிப் பெயர்ச்சி வரை சற்று பொறுமையாக செயல்படுவது நல்லது.

    குரு - சுக்ர பரிவர்த்தனை

    சித்திரை 1-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை குரு - சுக்ர பரிவர்த்தனை இருக்கிறது. உங்கள் ராசிக்கு பஞ்சம - அஷ்டமாதிபதியாக விளங்கும் குருபகவான், தொழில் ஸ்தானத்தில் பரிவர்த்தனை யோகம் பெறுவதால் தொழில் முன்னேற்றம் திருப்தி தரும். தொடக்கத்தில் அச்சுறுத்தலாக தோன்றிய செயல்கள் முடிவில் ஆதாயத்தை தரும். எதையும் திட்டமிட்டு செய்தே வெற்றி காண்பீர்கள். இதுவரை முடிவடையாமல் விரக்தியை ஏற்படுத்திய திருமணப் பேச்சு இப் பொழுது முடிவாகலாம். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மேலிடத்து ஆதரவோடு நல்ல பொறுப்பு கிடைக்கும்.

    கும்ப- ராகு, சிம்ம - கேது

    சித்திரை 13-ந் தேதி கும்ப ராசியில் ராகுவும், சிம்ம ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். ஜென்ம கேதுவின் ஆதிக்கம் நடைபெறும் இந்த நேரம், ஞானநிலை உங்களைத் தேடிவரும். அஞ்ஞானம் உங்களை விட்டு விலகும். வாழ்க்கையை இப்படிதான் வாழ வேண்டும் என்று கற்றுக்கொள்வீர்கள். சப்தம ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால், வாழ்க்கை துணையோடு அடிக்கடி பிரச்சினை வந்து அலைமோதும்.

    எதையும் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பாகப்பிரிவினை இழுபறி நிலையில் இருந்தாலும், திடீரென உடன்பிறப்புகளின் மனமாற்றத்தால் நல்ல முடிவை எட்டும். சுபச்செலவு அதிகரிக்கும். சர்ப்பக் கிரக வழிபாட்டின் மூலம் நல்ல சந்தர்ப்பங்கள் தேடிவரும்.

    மேஷ - புதன் சஞ்சாரம்

    சித்திரை 17-ந் தேதி மேஷ ராசிக்கு புதன் வருகிறார். அங்குள்ள சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார். உங்கள் ராசிக்கு தன - லாபாதிபதியான புதன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது நல்ல நேரமாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் பாராட்டும், புகழும் கூடும். மனக்கலக்கம் அகலும். மகிழ்ச்சியான தகவல்கள் தினமும் வந்த வண்ணமாக இருக்கும்.

    மிதுன - குரு சஞ்சாரம்

    சித்திரை 28-ந் தேதி மிதுன ராசிக்கு குரு வருகிறார். லாப ஸ்தானத்திற்கு வரும் குருவாலும், அதன் பார்வை பலத்தாலும் மிகுந்த நன்மை கிடைக்கும். குறிப்பாக சகோதர ஒற்றுமை பலப்படும். உடன்பிறப்புகளின் இல்லங்களில் நடைபெறும் சுபகாரியங்களை முன்னால் நின்று நடத்தி வைப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். வீடு கட்டி குடியேறும் எண்ணம் நிறைவேறும். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில் எண்ணற்ற தடைகள் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு குறுக்கீடு காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். கலைஞர்களுக்கு அதிக முயற்சியின் பேரில் வாய்ப்புகள் கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு மறதி அதிகரிக்கும். பெண்களுக்கு குடும்பச்சுமை கூடும். கொடுக்கல் - வாங்கல்களில் மந்த நிலை உருவாகும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஏப்ரல்: 16, 17, 27, 28, மே: 2, 3, 8, 9, 10.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிரே.

    ×