என் மலர்
மிதுனம்
புத்தாண்டு ராசிபலன்கள்-2024
அறிவாற்றல் மிகுந்த மிதுன ராசியினருக்கு ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இந்த புதிய வருடத்தில் வருட கிரகமான குரு பகவான் 11, 12ம் மிடத்திலும் சனி பகவான் 9ம்மிடத்திலும், ராகு, கேதுக்கள் 10, 4-ம் இடத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள். சனி மற்றும் ராகு, கேதுவின் சஞ்சாரம் மிகச் சாதகமாக உள்ளதால் திட்டமிட்டு வெற்றி பெறுவீர்கள். துன்பங்களும் துயரங்களும் முடிவுக்கு வரப்போகிறது. சனிபகவானும், ராகு கேதுவும் சாதகமாக இருப்பதால் புத்தாண்டை சந்தோஷமாக அனுபவிப்பீர்கள்.
குருவின் சஞ்சார பலன்கள்
ஆண்டின் துவக்கத்தில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவானால் தங்கம், வெள்ளி, வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை மகிழ்ச்சியை அதிகரிக்கும். இல்லத்தில் தடைபட்ட சுப நிகழ்வுகள் இனிதே நடைபெறும். ஏப்ரல் 21-ம் அன்று லாப ஸ்தானத்தில் பயணம் செய்த குரு விரைய ஸ்தானத்திற்கு வருகிறார்.
குருவின் 5-ம் பார்வை 4-ம் மிடமான சுக ஸ்தானத்தையும் 7-ம் பார்வை 6-ம் இடமான ருண, ரோக, சத்ரு, ஸ்தானத்தையும் 9-ம் பார்வையால் அஷ்டம ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார். விரய குருவின் பார்வை சுக ஸ்தானத்தில் பதிவதால் புது வீடு கட்டலாம். சுப விரைய செலவுகள் ஏற்படும். நோய்கள் தீரும். வைத்தியச்செலவு குறையும். கடன்கள் தீர்ந்து மன அழுத்தங்கள் குறையும்.
உத்தியோகம் அல்லது தொழில் மாற்றங்களை சந்திக்க நேரும். வெளிநாட்டு, அரசு வேலை வாய்ப்பு முயற்சி வெற்றி தரும். பணியில் கவனத்துடன் செயல்பட வேண்டும். குடும்பத்தில் ஏதாவது செலவு இருந்து கொண்டே இருக்கும்.வழங்குகளில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆயுள் பயம் அகலும். விரய குரு என்பதால் பண விசயத்தில் யாரையும் நம்பாமல் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
சனியின் சஞ்சார பலன்கள்
ஆண்டு முழுவதும் 8,9-ம் அதிபதி சனி பகவான் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். 3-ம் பார்வையால் லாப ஸ்தானத்தையும் 7-ம் பார்வையால் முயற்சி ஸ்தானத்தையும் 10ம் பார்வையால் ருண, ரோக சத்ரு ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார்.இந்த புத்தாண்டில் அறிவு, திறமை இருந்தும் பயன்படுத்தவோ சாதிக்கவோ முடியவில்லையே என்ற மனக்குறை தீரும். உண்மையான உழைப்பிற்கான பலனை அறுவடை செய்யும் நேரம்.
திடமான நம்பிக்கையும், தெம்பும், உற்சாகமும் அதிகரிக்கும். செய்த தர்மம் தலை காக்கும். சாதிக்கும் தைரியமும் தன்னம்பிக்கையும் மேலோங்கும். முயற்சிகளில் முன்னேற்றத்தில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் விலகும். தடை பட்ட அனைத்து சுப பலன்களும் தேடி வரும். தொழிலில் வெற்றியும், மேன்மையும் லாபமும் உண்டாகும். தேவைக்கு மீறிய கடனை தவிர்க்க வேண்டும்.
ஆன்மீக, வெளிநாட்டுச் சுற்றுப் பயணம் சென்று வரும் சந்தர்ப்பம் உருவாகும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் திருமணம், குழந்தை பேறு போன்ற கடமைகளை முன் நின்று நடத்துவீர்கள்.உடன் பிறந்தவர்களுடன் பாகப்பிரிவினை பேச்சுவார்த்தை, முயற்சி நடக்கும். ஞாபக சக்தி குறைவு சீராகும். காது, மூக்கு தொடர்பான அறுவை சிகிச்சை நடக்கும்.நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
ராகு கேது சஞ்சார பலன்கள்
ராகு கேதுக்கள் தொழில் மற்றும் சுகஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரம் பெருகும். புதிய தொழில் கூட்டாளி மற்றும் தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பு உயரும். நேர்வழி, குறுக்குவழி என பணம் பல வழிகளில் பணம் பையை நிரப்பும். சேமிப்புகள் முதலீடுகள் அதிகரிக்கும். விண்ணப்பித்த வீடு, தொழில் முன்னேற்ற கடன் கிடைக்கும்.வீடு மாற்றம் அல்லது வேலை மாற்றம் ஏற்படும். அதிர்ஷ்டம், புதையலை நம்பி கால விரயம் செய்வீர்கள்.தவறான சொத்து அல்லது பயன்படாத சொத்தை கட்டிக்காத்து ஏமாறுவீர்கள்.
பணியில் இருப்பவர்கள் விரைந்து செயல்படுவதன் மூலம் உயர் அதிகாரிகளின் பாராட்டை பெற முடியும். உங்களை புண்படுத்திய சகோதர சகோதரிகள் மனம் திருந்துவார்கள்.திருமண வாய்ப்பு தேடி வரும்.தம்பதிகள் ஏதேனும் காரணமாகவோ வெவ்வேறு ஊர்களில் பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்தால் இப்பொழுது ஒன்றாக இணைந்து மகிழ்ச்சிகரமாக இல்லறம் நடத்தலாம். விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள், பண்ணையாளர்களின் தொழில் வளர்ச்சி பிரமாண்டமாகும். பிள்ளைகளுக்கு கல்வி ஆர்வம் கூடும்.
மிருகசீரிஷம் 3, 4
உங்களின் கெளரவம், அந்தஸ்து உயரும்.பணப் புழக்கம் சரளமாக இருக்கும். சீட்டுப் பணம், ரேஸ், பங்குச் சந்தை மூலம் வருமானம் பெருகும். ஒரு சிலர் பூர்வீகச் சொத்தை விற்று புதிய சொத்து வாங்குவார்கள்.பிரிந்த உறவுகள் மீண்டும் இணைவார்கள். ஆடம்பர விழாக்களில் கலந்து கொள்வீர்கள். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் வாக்கிற்கு மதிப்பு, மரியாதை உண்டாகும்.
துணிச்சல் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நிலவிய சின்னச் சின்ன தகராறுகள் முடிவிற்கு வரும். வயதானவர்கள் வெளிநாட்டில் உள்ள பிள்ளைகளிடம் சென்று செட்டிலாகலாம். புத்திர பாக்கியம் தடைபட்டவர்கள் செயற்கை கருத்தரிப்பு முறையை அணுக உகந்த காலம். நிலுவையில் உள்ள பாக்கிகள் வசூலாகும். பழைய கடன்களையும், சிக்கல்களையும் தீர்க்கும் நிலை உருவாகும். தத்தாத்ரேயரை வழிபட வளம் பெருகும்.
திருவாதிரை
மனம் விரும்பும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள்.பணம் என்பது மனிதனுக்கு வரப்பிரசாதம். நட்சத்திராதிபதி ராகு பகவானால் பணக்கவலை குறையும் பாக்கிய பலத்தால் தாராளமான வரவு செலவு, பணப்புழக்கமும் உண்டாகும். கைநிறைய பணம் புரள்வதால் புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிடைக்கும். புதிய தெம்பு மற்றும் தைரியத்துடன் வீர நடை போடுவீர்கள்.
பூர்வீகச் சொத்தில் பாகப் பிரிவினை நடக்கலாம்.பேச்சில் நிதானமும் கவனமும் தேவை. காதலர்கள் விட்டுக் கொடுத்து செல்லவும். நீண்ட காலமாக தொல்லை கொடுத்து வந்த குடும்ப பிரச்சனைகள் படிப்படியாக நல்ல முடிவுக்கு வரும்.அவ்வப்போது சிறு சோர்வு, அசதி அலுப்பு தோன்றி மறையும். அடிக்கடி கை கால்களில் உடம்புகளில் வலி இருந்து கொண்டே இருக்கும். சிவனுக்கு பச்சை கற்பூரம் அபிசேகம் செய்து வழிபடவும்.
புனர்பூசம் 1,2,3
உடல் ரீதியான மன ரீதியான சங்கடங்கள் மறைந்து பாக்கிய பலன்கள் சித்திக்கும். மற்றவர்களால் மதிக்கக்கூடிய நிலையை அடைவீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் துரிதமாகும்.முன்னோர்களின் நல்லாசியும் குல தெய்வ அருளும் உண்டாகும். புனித ஸ்தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். புத்திர பிராப்தம் கிடைக்கும். தொழில் கூட்டாளிகள் இடையே முறையான ஒப்பந்தம் போட்டு தொழில் நடத்த வேண்டும். பணம் கொடுக்கல், வாங்கலில் பெரிய தொகையை கையாள்வதைத் தவிர்க்கவும்.
பிள்ளைகளின் கல்வி, திருமணம் என சுப விரயமும் உண்டாகும். அலைச்சல் மிகுந்த பயணம் அதிகரிக்கும். கடன் பெற்று அசையும், அசையாச் சொத்து வாங்குவீர்கள். புதிய கடன் பெற்று பழைய கடனை அடைப்பீர்கள். தனியார் நிறுவனத்தில் வேலை பார்பவர்களுக்கு கம்பெனி செலவில் வெளிநாடு சென்று பணிபுரியும் சந்தர்ப்பம் கிட்டும். வியாழக்கிழமை ஸ்ரீ சாய் பாபாவை வழிபடவும்.
திருமணம்
திருமண வயதில் உள்ள ஆண் பெண்களுக்கு திருமணம் கை கூடி வரும். நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்கும். திருமணத்திற்கான நாளை எண்ண வேண்டிய நேரம் வந்து விட்டது. மேலும் நின்று போன திருமணங்கள் இனி சுபமாக நடைபெறும். நீண்ட வருடங்களாக தடைபட்ட திருமண முயற்சியில் சாதகமான திருப்பம் ஏற்படும். மறு விவாக முயற்சி வெற்றி தரும்.
பெண்கள்
பெண்களுக்கு நிம்மதியான சூழல் நிலவும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையும். சிக்னமாக இருக்க முயற்சி செய்வீர்கள். அடமானத்தில் உள்ள நகைகளை மீட்கக் கூடிய சந்தர்ப்பம் கூடி வரும். புதிய அணிகலன்கள், அழகு, ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். பெண்களுக்கு மண வாழ்க்கை மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். கணவன், மனைவி ஒற்றுமை மேம்படும் அற்புதமான நல்ல நேரம். மூத்த சகோதர, சகோதரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து தடைபட்ட பாகப்பிரிவினை சொத்து, பணம் வரும்.
வியாபாரிகள்
இதுவரை ஒரு தொழில் செய்து வந்தவர்கள் இரண்டு தொழில் செய்வார்கள். பலருக்கு புதிய தொழில் எண்ணம் வரும். வருமானம் பல மடங்கு பெருகும். புதிய தொழில் துவங்கும் விரும்பம் உள்ளவர்கள் .கணிதம் சார்ந்த தொழில்கள், வங்கி தொழில், ஜோதிடம், காலி நில விற்பனை, நடிப்பு தொழில், புத்தக விற்பனை , வெளிநாட்டு பொருள் இறக்குமதி, விஷ மருந்துகள், கமிஷன் தொழில் செய்யலாம். புதிய தொழில் தந்திரங்களை பயன்படுத்தி வருமானத்தை அதிகப்படுத்துவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள்
வேலை மாற்றம் நடக்கும்.இழந்த பதவிகள் மீண்டும் கிடைக்கும்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய பணியிட மாற்றம் கிடைக்கும். வேலை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். சமூக நலச் சங்கங்களில் பதவி கிடைக்கும். உத்தியோகரீதியான பயணங்கள் அதிகரிக்கும். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பும் ஆதரவும் மகிழ்ச்சியைத் தரும்.
அரசியல்வாதிகள்
4-ல் கேது 10-ல் ராகு. கட்சி மேலிடத்தின் ஆதரவும் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியைத் தரும். பல வருடமாக உழைத்த உழைப்பிற்கு பலன் கிடைக்கும் காலம் வந்துவிட்டது. புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். உயர்ந்த நிலைக்கு உயர்த்தும் ராகு எதிர்பாராத சறுக்கலையும் ஏற்படுத்தும், வீண் பழிக்கு ஆளாக நேரும் என்பதால் சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்யக்கூடாது.
பரிகாரம்
வெற்றிலை, பாக்கு வாழைப்பழம் வைத்து புதன்கிழமை இஷ்ட குலதெய்வம், மகாவிஷ்ணுவை வழிப்பட்டால் மன நிம்மதி கூடும்.






