என் மலர்tooltip icon

    மிதுனம்

    2025 ஆவணி மாத ராசிபலன்

    மிதுன ராசி நேயர்களே!

    ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு 2-ம் இடமான தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே பணப்புழக்கம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் படிப்படியாக நடைபெறும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். ராசியிலேயே குரு சுக்ர சேர்க்கை இருப்பதால் திடீரென சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். பஞ்சாயத்துக்கள் சாதகமாகும். சனி வக்ர இயக்கத்தில் இருப்பதாலும், அதை குரு பார்ப்பதாலும் தாமதப்பட்ட காரியங்கள் தடையின்றி நடைபெறும். பயணங்கள் பலன்தரும்.

    கடக - சுக்ரன்

    ஆவணி 5-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். புத்திர ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானத்திற்கு அதிபதியான சுக்ரன், தன ஸ்தானத்திற்கு வருவதால் பிள்ளைகளால் விரயங்கள் ஏற்படலாம். அவர்களின் எதிர்கால நலன்கருதி திட்டமிட்டு செயல்படுவது நல்லது. 'புத சுக்ர யோகம்' இருப்பதால் பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாகவோ அல்லது வெளிநாடு சென்று வேலை பார்க்க வேண்டுமென்ற அவர்களின் எண்ணத்தைப் பூர்த்தி செய்வதற்காக எடுத்த முயற்சி கைகூடும். மாமன், மைத்துனர் வழியில் மனதிற்கினிய சம்பவம் நடைபெறும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த சம்பள உயர்வு உண்டு. அதே நேரத்தில் இடமாற்றம் அல்லது இலாகா மாற்றம் பற்றி சிந்தித்தவர்களுக்கு அதுவும் கைகூடும்.

    சிம்ம - புதன்

    ஆவணி 9-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 4-ம் இடத்திற்கு அதிபதியாகவும் இருப்பவர் புதன். சுக ஸ்தானாதிபதி, சகாய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் எல்லாவிதமான சவுகரியங்களும் உங்களுக்கு கிடைக்கும். குறிப்பாக ஆரோக்கிய பாதிப்புகள் அகலும். அடுத்தடுத்து நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். 'புத ஆதித்ய யோகம்' இருப்பதால் பொருளாதாரத்தில் உச்ச நிலையை அடைவீர்கள். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களை பங்கிட்டுக் கொள்வதில் இருந்த பிரச்சினைகள் அகலும். பெற்றோர் வழியில் சில நல்ல காரியங்கள் நடைபெறும்.

    துலாம் - செவ்வாய்

    ஆவணி 29-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் புதிய திருப்பங்கள் ஏற்படும். குறிப்பாக என்றைக்கோ குறைந்த விலைக்கு வாங்கிப்போட்ட இடம் இப்பொழுது அதிக விலைக்கு விற்று லாபத்தைக் கொடுக்கும். தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். 'குரு மங்கள யோகம்' இருப்பதால் இல்லத்தில் மங்கல ஓசை கேட்க வழிபிறக்கும்.

    சிம்ம - சுக்ரன்

    ஆவணி 30-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சகாய ஸ்தானத்திற்கு வரும் பொழுது பிள்ளைகளால் பெருமை சேரும். படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கும். வெளிநாடு சென்று படிக்க வேண்டும், அங்கு வேலை பார்க்க வேண்டும், கைநிறைய சம்பாதிக்க வேண்டும் என்று கனவு கண்டவர்களுக்கு இப்பொழுது கனவுகள் நனவாகும் நேரமாகும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மாதத்தின் மையப் பகுதி மகிழ்ச்சி தரும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு துணிந்து எடுத்த முடிவுகள் வெற்றி தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவி உண்டு. கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும். மாணவ- மாணவிகளுக்கு மறதி விலகும். மதிப்பெண் கூடும். பெண்களுக்கு விரயங்கள் ஏற்படும் நேரம் என்பதால், சுப விரயமாக மாற்ற முயற்சிப்பது நல்லது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஆகஸ்டு: 21, 22, 26, 27, 28, செப்டம்பர்: 7, 8, 11, 12.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.

    ×