என் மலர்tooltip icon

    மகரம்

    2025 புத்தாண்டு ராசிபலன்

    சனி மாறும் வரை பொறுமை தேவை மகர ராசி நேயர்களே!

    புத்தாண்டின் தொடக்கத்தில் குடும்பச் சனியின் ஆதிக்கம் நடைபெறுகிறது. உங்கள் ராசிநாதன் சனி என்பதால், ஏழரைச் சனியால் பெரிய இடையூறுகள் ஏற்படாது. ஆயினும் சனியை 'மந்தன்' என்று அழைப்பதால், எந்த காரியமாக இருந்தாலும் மந்தமாகவே நடைபெறும். வருமானப் பற்றாக்குறை அகலும். என்றாலும் பணம் வந்த மறு நிமிடமே செலவாகிவிடும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

    புத்தாண்டின் கிரக நிலை

    புத்தாண்டின் தொடக்கத்தில் சனி பகவான், உங்கள் ராசிக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு சுக்ரனும் இணைந்திருக்கிறார். ஏழரைச் சனியில் முதல் சுற்றாக இருந்தால், பொருளாதார பிரச்சினையும், மனநிம்மதி குறைவும் ஏற்படும். இரண்டாவது சுற்றாக இருப்பின் வசதி வாய்ப்பு வரும். மூன்றாவது, நான்காவது சுற்று என்றால், ஆரோக்கியத் தொல்லை வரும். குரு வக்ர இயக்கத்தில் இருப்பது நன்மைதான். விரயத்திற்கேற்ற வருமானம் வந்துசேரும்.

    3-ல் ராகுவும், 9-ல் கேதுவும் ஆண்டின் தொடக்கத்தில் சஞ்சரிக்கிறார்கள். ராகு-கேது பெயர்ச்சிக்குப்பின், அஷ்டமத்தில் கேது சஞ்சரிக்கப் போவதால் மிகமிக கவனம் தேவை. பொருளாதார பற்றாக்குறை அதிகரிக்கும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது.

    சனிப் பெயர்ச்சி வரை பொறுமையாக செயல் படுங்கள். விரயங்களை சுப விரயமாக மாற்றுங்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்பு வரும். மனக் கவலை அதிகரிக்காமல் இருக்க இதுபோன்ற காலங்களில் மந்தன் வழி பாடும், கந்தன் வழிபாடும், நாக சாந்தி பரிகாரமும் அவசியம்.

    கும்ப - ராகு, சிம்ம - கேது

    26.4.2025 அன்று ராகு - கேதுக் களின் பெயர்ச்சி நிகழவிருக்கிறது. உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் ராகுவும், 8-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். இரண்டில் சஞ்சரிக்கும் ராகுவால் பொருளாதார நிலை உயரும். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். கடன் சுமை குறைய நீங்கள் எடுத்த புது முயற்சி வெற்றிபெறும். இல்லத்தில் சுப காரியம் நடைபெற வழிபிறக்கும்.

    உங்கள் ராசிக்கு அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் கேதுவால், ஆரோக்கிய தொல்லை அதிகரிக்கும். அலைச் சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. மனதில் நினைத்ததை செய்ய முடியாத சூழல் உருவாகும். புதியவர்களை நம்பி எதுவும் செய்ய இயலாது. புனித பயணங்கள் அதிகரிக்கும். மகிழ்ச்சி குறையாமல் இருக்க ராகு- கேதுக்களுக்குரிய வழிபாடுகளை செய்வது நல்லது.

    மிதுன - குரு சஞ்சாரம்

    11.5.2025 அன்று குரு பகவான், மிருகசீர்ஷம் 3-ம் பாதத்தில் மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அவரது பார்வை 2, 10, 12 ஆகிய இடங்களில் பதிகிறது. குருவின் பார்வை 2-ம் இடத்தில் பதிவதால் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். கூடுதல் லாபம் கிடைக்கும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். கல்யாண முயற்சி கைகூடும். உதாசினப்படுத்திய உறவினர்கள் தேடிவருவர். பொருளாதாரத்தில் இருந்த பற்றாக்குறை அகலும். வியாபாரம் வெற்றி நடைபோடும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, பணி நிரந்தரம் கிடைக்கும்.

    10-ம் இடத்தைப் பார்க்கும் குருவால், முத்தான தொழில் வாய்க்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த எடுத்த முயற்சி வெற்றிபெறும். ஆதாயம் தரும் தகவல் அடுக்கடுக்காக வந்துகொண்டே இருக்கும். 'பழைய பங்குதாரர்களை விலக்கிவிட்டு புதியவர்களை சேர்த்துக்கொள்ளலாமா?' என்று சிந்திப்பீர்கள். தொழில் போட்டி விலகும். சொந்த பந்தங்கள் உங்கள் முன்னேற்றத்தை கண்டு ஆச்சரியப்படுவர்.

    12-ம் இடத்தை குரு பார்ப்பதால் இடமாற்றம், ஊர் மாற்றம் எளிதில் கிடைக்கும். ஒரு சிலர் வெளிநாடு செல்லும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். புதிய நண்பர்களின் நட்பு கிடைக்கும். சங்கிலித் தொடர்போல கடன் சுமை கூடினாலும், அதை சமாளித்து விடுவீர்கள். நீண்ட தூரத்தில் பணிபுரியும் உறவினர்கள், உங்கள் நிகழ்காலத் தேவைகளை பூர்த்தி செய்ய உதவுவர். இல்லத்தில் சுப காரியங்கள் நடைபெற வழிபிறக்கும்.

    கும்ப - சனி சஞ்சாரம்

    வருடத் தொடக்கம் முதல் கும்ப ராசியிலேயே சனி சஞ்சரிக்கிறார். அவரது பார்வை 4, 8, 11 ஆகிய இடங்களில் பதிகிறது. சுக ஸ்தானத்தில் சனியின் பார்வை பதிவதால் ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். பெயரளவில் பாதிப்புகள் ஏற்படாது. என்றாலும் ஒரு சில பிரச்சினைகளை எதிர்கொள்ளத்தான் வேண்டும். வழிபாடுகளால் கெடுபலன்கள் குறையும். வரவுக்கு முன்பாகவே செலவு காத்திருக்கும்.

    கடக - குரு சஞ்சாரம்

    வருடத் தொடக்கத்தில் மிதுன ராசிக்குச் செல்லும் குரு பகவான், 8.10.2025 அன்று கடக ராசிக்கு அதிசாரமாகச் செல்கிறார். அங்கு 19.12.2025 வரை இருக்கும் அவர், உச்சம் பெற்று பலம் பெறுகிறார். இக்காலத்தில் அவரது பார்வைக்கு அதிக பலன் உண்டு. அவரது பார்வை 1, 3, 11 ஆகிய இடங்களில் பதிகிறது. உங்கள் ராசியில் குருவின் பார்வை பதிவது யோகம்தான். உடல் நலம் சீராகும். உள்ளத்தில் உற்சாகம் குடிகொள்ளும். கனவுகள் நனவாகும்.

    சகாய ஸ்தானத்திலும், லாப ஸ்தானத்திலும் குருவின் பார்வை பதிவதால், வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும். உடன்பிறப்புகள் உதவிகரமாக இருப்பர். பாகப் பிரிவினைகள் சுமுகமாக முடியும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களால், சில பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். பிரிந்திருந்த தம்பதியர், ஒரே இடத்தில் பணிபுரியும் வாய்ப்பைப் பெறுவர். உச்ச குருவால் நன்மைகள் கிடைக்க யோக பலம்பெற்ற நாளில், குரு பகவானுக்குரிய சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள்.

    குருவின் வக்ர காலம்

    18.11.2025 முதல் 19.12.2025 வரை கடகத்திலும், 20.12.2025 முதல் 31.12.2025 வரை மிதுனத்திலும் குரு வக்ரம் பெறுகிறார். இக்காலத்தில் மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டும். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. அலைச்சலுக்கேற்ற ஆதாயம், உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காது.

    உடன்பிறப்புகள் வழியில் பிரச்சினைகள் உருவாகும். வருங் கால நலன்கருதி எடுத்த முயற்சிகளில் இடையூறுகள் வரலாம். மற்றவர்களை நம்பி எதையும் செய்ய இயலாது. வாகனப் பழுதுகளால் வாட்டம் உண்டு. வீடு மாற்றம், இடமாற்றம், உத்தியோக மாற்றம் ஏற்படக்கூடும். இக்காலத்தில் குரு வழிபாடு மிகவும் தேவை.

    சனியின் வக்ர காலம்

    கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், 2.7.2025 முதல் 17.11.2025 வரை வக்ரம் பெறுகிறார். இது அவ்வளவு நல்லதல்ல. குடும்பச் சுமை கூடும். பிறருக்கு நன்மை செய்தாலும் அது தீமையாக தெரியும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. பற்றாக்குறையின் காரணமாக ஒரு சிலருக்கு கடன் வாங்கும் சூழல் உருவாகும். 'மனதில் நினைத்ததை செய்ய இயலவில்லையே' என்று கவலைப்படுவீர்கள்.

    உதவி செய்வதாக சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம். உயர் அதிகாரியின் கெடுபிடியால் மன உளைச்சல் ஏற்படும். எனவே இக்காலத்திலும், செவ்வாய்-சனி பார்வை காலத்திலும் தெய்வ வழிபாட்டால் சிறப்புகளைப் பெறுங்கள்.

    ×