என் மலர்tooltip icon

    மகரம்

    2025 தமிழ் புத்தாண்டு ராசிபலன்

    முயற்சிகள் பலிதமாகும்

    பூர்வ புண்ணியம் நிறைந்த மகர ராசியினரே..

    எதிரியையும் தன் வீட்டில் உட்கார வைத்து அழகு பார்க்கும் மகர ராசியினருக்கு விசுவாசு ஆண்டு வியக்கத்தகு ஆண்டாக அமைய நல்வாழ்த்துக்கள். ஆண்டின் துவக்கத்தில் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான் தனது மூன்றாம் பார்வையால் பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் ஏழாம் பார்வையால் ஒன்பதாம் இடமான பாக்கியஸ்தானத்தையும் பத்தாம் பார்வையால் விரய ஸ்தானத்தையும் பார்ப்பார்.

    14.5.2025 முதல் ருண, ரோக சத்ரு ஸ்தானத்திற்கு செல்லும் குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையால் பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தையும் ஏழாம் பார்வையார் விரய ஸ்தானத்தையும் ஒன்பதாம் பார்வையால் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தையும் பார்ப்பார்.

    18.05.2025 முதல் ராகு பகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்திலும், அஷ்டம ஸ்தானத்தில் கேது பகவானும் சஞ்சரிப்பார்கள்.இதனால் ஏற்படப் போகும் பலன்களை பார்க்கலாம்.

    விசுவாசு ஆண்டின் பொதுவான பலன்கள்

    இந்த தமிழ் புத்தாண்டில் சனி பகவானின் சஞ்சாரம், பார்வை பலன்கள் சற்று சாதகமாக உள்ளது. குருபகவானின் பார்வை பலன்கள் உங்களுக்கு ஏற்றத்தை வழங்கும். ராகு கேதுக்களின் சஞ்சாரம் சற்று சுமாராக உள்ளது. தோற்றப்பொலிவு மற்றும் பழக்கவழக்கங்களில் சிறு சிறு புதுமைகள் ஏற்படும்.

    மனதில் நல்ல ஆடம்பரமான எண்ணங்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். வெளியூர், வெளிநாட்டு பயணங்களில் நிலவிய தடைகள், தாமதங்கள் அகலும். வெளியூர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேடி வரும்.

    ஆன்மீக நாட்டம் அதிகமாகும். இளைய சகோதரர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். திருமண வயதில் உள்ள மகன் அல்லது மகளின் திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும்.

    குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு அதிக பொறுப்புகளால் மனதில் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். காதல் முயற்சிகளால் அவப்பெயர் உண்டாகும்.

    வேற்று மொழி பேசுபவர்கள், வேற்று மதத்தினரின் நட்பு மற்றும் உதவிகள், ஆதாயம் கிடைக்கும். எந்த செயலையும் திட்டமிட்டு செய்தால் பெரிய பாதிப்பு இல்லாமல் தப்பிக்க முடியும். பார்க்கும் வேலையை மாற்றக் கூடாது.

    எதிர்பாலின நட்பை தவிர்க்கவும். தேவையற்ற வம்பு வழக்குகளை தவிர்க்கவும். எல்லோரையும் அனுசரித்து செல்ல வேண்டும். குடும்பத்தில் சங்கடங்களை தவிர்க்க பேச்சை கட்டுப்படுத்துவது நல்லது. உணவுக் கட்டுப்பாடு அவசியம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். சிலருக்கு விபத்து கண்டம், சர்ஜரி அவமானம் போன்ற பாதிப்புகள் இருக்கும்.

    புத்திர பிரார்த்தம் உண்டாகும். பேரன், பேத்தி யோகம் கிடைக்கும். திருடு போன, கை மறதியாக வைத்த பொருட்கள் கிடைக்கும். பொருளாதார விஷயத்தில் கவனம் செலுத்தி விரையத்தை சேமிப்பாகவோ, சுப விரையமாகவோ மாற்ற முறையான திட்டமிடல் தேவை.

    பொருளாதாரம்

    2ல் ராகு 8ல் கேது. தனம், வாக்கு ஸ்தானத்திற்கு குருப் பார்வை. சிலருக்கு விபரீத ராஜ யோகமாக பொன் பொருள் சேரும். அதிர்ஷ்டம் நீங்கள் இருக்குமிடம் தேடி வரும். அதிர்ஷ்டத்தின் மேல் ஆர்வம் கூடும். அதிர்ஷ்ட பொருள், பணம், உயில் சொத்து கிடைக்கும். பணவசதி சிறப்பாக இருக்கும்.

    பொருளாதார நிலையிலே மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும். வராது என்று நினைத்த பணம் வந்து சேரும். குடும்ப செலவிற்கு தேவையான பணம் தாராளமாக கிடைக்கும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள்

    உத்திராடம் 2, 3, 4

    உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு உண்டாகும். இன்னல்கள் குறையும். சோதனைகளை சாதனைகளாக மாற்றுவீர்கள். மனமும், உடலும் உற்சாகமாக இருக்கும். அனைத்து விதமான சுப பலன்களும் நடக்கும்.

    ஒரு சில நேரங்களில் சின்ன சின்ன சங்கடங்கள் வந்தாலும் அதை பொருட்படுத்தாமல் சமாளித்து விடுவீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட மன சங்கடங்கள் குறையும். தீய பழக்கத்திலிருந்து விடுபடுவீர்கள். முன்னோர்களின் பரம்பரை வியாதியான கை, கால் வலி, சுகர், பிரஷர் போன்றவைகள் தலை தூக்கும்.

    சிலர் கூட்டுக் குடும்பத்திலிருந்து பிரிந்து தனிக் குடித்தனம் செல்லலாம். கிரடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் ATM கார்டுகளை கவனமாக கையாள வேண்டும். வீடு கட்டும் பணி துரிதமாகும். சிலர் வீட்டு மனை அல்லது புதிய வாகனம் வாங்குவீர்கள்.

    திருவோணம்

    மந்த தன்மை குறைந்து விரைந்து செயல்படும் தன்மை அதிகரிக்கும். தைரியத்துடன் மனம் விரும்பும் அனைத்தையும் சாதித்து காட்டுவீர்கள். வேலையை மாற்றம் செய்யும் எண்ணத்தை தவிர்ப்பது புத்திசாலித்தனம். கணவன், மனைவி உறவில் அன்பு மிளிரும். பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சொத்தில் கிடைத்த பங்கு புகுந்த வீட்டில் கவுரவப்படுத்தும்.

    தந்தை தொழில் அல்லது உத்தியோக நிமித்தமாக வெளியூர் அல்லது வெளிநாடு செல்வார். உடன் பிறந்தவர்கள், நண்பர்களின் உதவி பக்க பலமாக இருக்கும். உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் அகலும்.

    நீண்டநாளாக நிறைவேற்ற முடியாமல் தடைபட்ட குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். உணவால் ஒவ்வாமை ஏற்படும் என்பதால் எளிமையான உணவை சாப்பிடுவது நலம்.கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தால் கிரகங்களின் இயக்கம் பாதிப்பை தராது.

    அவிட்டம் 1, 2

    தொட்டது துலங்கும் .மனதிற்கு நிம்மதியும் தன் நம்பிக்கையும் தரும் நிகழ்வுகள் நடக்கும். தைரியம் மிகுதியாக இருக்கும். மனபலம், நிம்மதி கூடும். ஞாபக சக்தி அதிகரிக்கும். சிலர் மன அமைதி மற்றும் நிம்மதிக்காக தீர்த்த யாத்திரை செல்ல திட்டமிடுவார்கள். சிறிய வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள் வசதியான வீட்டிற்கு செல்லலாம். சிலர் தொழிலை ஒரு ஊரில் இருந்து வேறு ஊருக்கு மாற்றலாம்.

    வீடு வாகன யோகம் சிறப்பாக அமையும்.பாகப்பிரிவினையால் ஏற்பட்ட மன பேதம் சீராகும். ஒரு சிலர் உயில் எழுதுவார்கள். சிலர் எழுதிய உயில், ஆவணங்களில் திருத்தம் செய்வார்கள். கடன் தொகையை சமாளிக்க தேவையான பொருள் உதவி கிடைக்கும்.

    பெண்களுக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்ப உறவுகளிடம் பழைய கதையைப் பேசி வம்பை வளர்க்காமல் இருந்தால் மன நிம்மதி நிலைக்கும். சிலருக்கு தேவையற்ற பயணங்கள் உண்டாகும்.

    திருமணம்

    ஏழரைச் சனி யாருக்கும் திருமணத் தடையை தராது. அதனால் பெரும்பான்மையாக திருமணம் நடந்து இருக்கும். தற்போது குடும்ப ஸ்தானத்தில் ராகுவும் அஷ்டம ஸ்தானத்திற்கு கேதுவும் செல்வது கோட்சார ரீதியான சர்ப்ப தோஷத்தை ஏற்படுத்துகிறது.

    சுய ஜாதக ரீதியாக ராகு/கேது தசை நடப்பவர்கள் உரிய சாந்தி பரிகாரம் செய்த பிறகு திருமணம் நடத்த வேண்டும். ஆனாலும் குடும்ப ஸ்தானத்தில் உள்ள ராகுவை குரு பார்ப்பதால் விருப்ப விவாகங்கள் அதிகம் நடக்கும். சிலருக்கு திருமணத் தடை இருக்கும். வெகு சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் நடக்கும்.

    பெண்கள்

    பெண்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். முயற்சி ஸ்தான சனி பகவான் முத்தாய்பான முன்னேற்றத்தை வழங்குவார். முன்னேற்றத்துக்குத் தடை இருக்காது. உறவினர்களிடையே மதிப்பு மரியாதை அதிகரிக்கும். நண்பிகள் வட்டாரத்தில் உங்கள் செயல்பாடுகள் பாராட்டப்படும். பண வரவு அதிகரிக்கும்.

    குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். பேச்சை மூலதனமாக கொண்ட தொழிலில் சாதனை படைப்பார்கள். ஏதாவது புதிதாக விஷயம் கற்று அதை சார்ந்த தொழில் ஆரம்பிக்கலாம்.கற்ற கலை சார்ந்த வருமானம் உண்டு. தாய் வீட்டு சீதனத்தால் பெண்களுக்கு உற்சாகமும், தெம்பும் ஏற்படும்.

    மாணவர்கள்

    முயற்சி ஸ்தானத்திற்கு ராசி அதிபதி சென்று புத்திக் கூர்மையை குறிக்கும் 5ம் மிடத்தை பார்ப்பதால் ஆன்ம பலம் பெருகும்.மனதில் திடமான சிந்தனைகள் தோன்றும். கற்ற கல்வியால் வெற்றி புகழ் மதிப்பு, மரியாதை கிடைக்கும்.

    இரவும் பகலும் படித்த படிப்பு உங்களுக்கு கை கொடுக்கும். உயர்கல்வி, ஆராய்ச்சி கல்வி படிக்க நல் வாய்ப்பு உண்டாகும். குடும்ப சூழல் காரணமாக ஆரோக்கியம் காரணமாக கல்வியில் ஏற்பட்ட தடைகள் பாதிப்புகள் அகலும்.

    முதலீட்டாளர்கள், வியாபாரிகள்

    புகழ், அந்தஸ்து, கவுரவம், பொன், பொருள், செல்வம், செல்வாக்கு என எல்லாவிதமான பாக்கிய பலன்களையும் சனி பகவான் பெற்றுத் தருவார். பேச்சை மூலதனமாக கொண்டவர்களின் தனித்திறமை மிளிரும். 12ம்மிடமான விரய ஸ்தானத்தை சனி. குரு பார்ப்பதால் வியாபாரத்தை விரிவுபடுத்த நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளை சற்று தள்ளிப் போடுவது நல்லது.

    அல்லது சுய ஜாதக பரிசீலனை செய்த பிறகு தொழில் சார்ந்த முடிவுகளை எடுக்க வேண்டும். ஆன்லைன் வர்த்தகம் நடத்துபவர்களின் தொழிலில் அதிக சாதனை படைத்து வாழ்வாதாரத்தை உயர்த்துவார்கள். வேலையாட்களை தட்டிக் கொடுத்து செயல்படுவது நல்லது.

    உத்தியோகஸ்தர்கள்

    உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலையை விட்டு விட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். ஆள் குறைப்பால் வேலை இழப்பு ஏற்படும். ஊதியக் குறைப்பு, அதிக வேலை போன்றவற்றால் அதிதிருப்தி ஏற்படும் நேரம். கோட்சாரம் சற்று சுமாராக இருக்கும் போது பிரச்சனையை விட்டு ஒதுங்கி வாழப் பழகினால் பெரிய பாதிப்பு ஏற்படாது.

    சுய ஜாதகத்தில் தசா புத்தி சாதகமாக இருப்பவர்களுக்கு எந்த கெடு பலனும் ஏற்படாது. முக்கிய பணிகள் ஆரம்பத்தில் தடை, தாமதங்களைத் தந்ததும் முடிவில் காரிய அனுகூலத்தை தந்து விடும். சக்திக்கு மீறிய கடன், தேவையற்ற பேச்சைக் குறைத்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.

    அரசியல்வாதிகள்

    அரசியல் தொடர்புடையவர்களுக்கு பொது இடத்தில் புகழ் கிடைக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு இது நெருக்கடியான நேரம். ஆனால் தொடர்ந்து பதவியில் நிலைக்க முடியுமா என்பது கேள்விக்குறியே. ஆறில் குரு ஊரில் பகை என்பது பழமொழி. வெற்றியைத் வழங்கக் கூடிய உப ஜெய ஸ்தானத்தில் நிற்கும் குரு பகவானால் வெற்றி வாய்ப்புகள் மட்டுப்படும்.

    5ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு சனி பார்வை இருப்பது பதவி சம்பந்தமான பய உணர்வை அதிகரிக்கும். தேவையற்ற பேச்சுக்கள் மற்றும் வாக்குவாதங்களை குறைத்தாலே பெரிய பிரச்சனை எதுவும் வராது என்பதை உறுதியாக கூறலாம். இஷ்ட குலதெய்வ வழிபாடு உங்களை காக்கும்.

    பரிகாரம்

    உடல் அசதி, அசவுகரியம் மற்றும் பொருள் விரயத்தில் இருந்து விடுபட விபூதி அபிசேகம் செய்து சிவனை வழிபடவும். நவகிரக தோஷம் விலக தினமும் திருக்கோளறு பதிகம் படிக்கவும்.

    ×