என் மலர்tooltip icon

    கும்பம் - Kumbam

    2025 ஐப்பசி மாத ராசிபலன்

    கும்ப ராசி நேயர்களே!

    ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியிலேயே வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். மேலும் ஜென்மச் சனியாகவும் இருக்கிறார். எனவே ஏழரைச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால் எதிலும் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திடீர், திடீரென மனக்குழப்பம் ஏற்படும். ஜென்மத்தில் ராகுவும் இருப்பதால் பொருளாதாரத்தில் ஓரளவு திருப்தி ஏற்பட்டாலும் விரயங்கள் மிகவும் அதிகரிக்கும். எதையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்து செய்யவேண்டிய மாதம் இது.

    உச்சம் பெற்ற குரு

    மாதத் தொடக்கத்தில் குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு எதிர்ப்பு, வியாதி, கடன்சுமை ஆகியவற்றை குறிக்கும் இடத்தில் தனாதிபதி குரு உச்சம் பெறுவதால் இக்காலத்தில் மிகுந்த கவனம் தேவை. எதிரிகளின் பலம் மேலோங்கும். இணைந்து செயல்படுபவர்கள் உங்களை விட்டு விலக நேரிடும். ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். ஒரு சிலருக்கு ரண சிகிச்சைகள் கூட வரலாம். உத்தியோகத்தைப் பொறுத்தவரை உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைப்பது அரிது. திடீரென வரும் மாற்றங்கள் மனவருத்தத்தை உருவாக்கும்.

    சனி - ராகு சேர்க்கை

    மாதம் முழுவதும் உங்கள் ராசியிலேயே சனியும், ராகுவும் இணைந்து சஞ்சரிக்கிறார்கள். அதிலும் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். இது போன்ற நேரங்களில் நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக இருக்கலாம். மேலும் ஏழரைச் சனியில் ஜென்மச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால், அது எத்தனையாவது சுற்று என்பதைக் கண்டறிந்து செயல்பட வேண்டும். முதல் சுற்றோ, மூன்றாவது சுற்றோ நடைபெற்றால் முயற்சிகளில் தாமதம் ஏற்படும். நடுச்சுற்று நடந்தால் நல்லது நடக்க வழிபிறக்கும். இருப்பினும் சனி பகவானை முறையாக வணங்குவது நல்லது.

    விருச்சிக - செவ்வாய்

    ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வரும்போது, தொழிலில் முன்னேற்றமும், எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும். புதிய கூட்டாளிகள் வந்திணைவர். பொருளாதாரம் உயரும். அண்ணன், தம்பிகளுக்குள் இருந்த கருத்துவேறுபாடுகள் மாறும். சகோதரர்களுக்கு கொடுத்து உதவுவீர்கள். உடன்பிறப்புகளின் திருமணங்களை முன்நின்று நடத்துவீர்கள். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும்.

    துலாம் - சுக்ரன்

    ஐப்பசி 17-ந் தேதி, துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். இப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. இதுபோன்ற நேரத்தில் பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி நீங்கள் எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிரச்சனைகள் ஒவ்வொன்றாக நல்ல முடிவிற்கு வரும். முன்னோர் சொத்துக்களில் முறையாக பங்கீடு கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து உத்தியோகம் சம்பந்தமாக நல்ல அழைப்புகள் வரலாம். கை நழுவிச் சென்ற வாய்ப்புகள் கூட இப்பொழுது கைகூடிவரும். உறவினர் பகை அகலும். தாய்வழி ஆதரவு உண்டு.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நண்பர்களால் நல்ல திருப்பங்கள் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு போதுமான முதலீடு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். கலைஞர்களுக்கு வளர்ச்சியும், தளர்ச்சியும் மாறி மாறி வரலாம். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை தேவை. பெண்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் இல்லம் தேடிவரும். வருமானம் திருப்தி தரும். சொத்துக்கள் வாங்கும் முயற்சி கைகூடும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    அக்டோபர்: 22, 23, 27, 28, நவம்பர்: 3, 4, 7, 8.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.

    ×