என் மலர்tooltip icon

    கும்பம் - தமிழ் மாத ஜோதிடம்

    கும்பம் - Kumbam

    தமிழ் மாத ராசிப்பலன்

    உயர்நிலையை அடைய கடுமையாக உழைக்கும் கும்ப ராசி நேயர்களே!

    ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, ஏழரைச் சனியில் விரயச் சனியின் ஆதிக்கம் நடைபெறுகிறது. மேலும் செவ்வாய் சனியைப் பார்க்கிறார். எனவே மிகமிக கவனம் தேவைப்படும் நேரம் இது.

    துலாம் - சுக்ரன் சஞ்சாரம்

    உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் ஐப்பசி 2-ந் தேதி துலாம் ராசியில் தன் சொந்த வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். இதனால் கொடுக்கல்- வாங்கல் ஒழுங்காகும். வளர்ச்சி கூடும். தேங்கிய காரியங்கள் துரிதமாக நடக்கும். ஆயினும் விரயச் சனியின் ஆதிக்கம் நடப்பதால் சேமிக்க இயலாது. செலவுகள் அதிகரிக்கும். விரயங்களைச் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. என்றாலும் தன ஸ்தானாதிபதியும் வலுவிழந்திருப்பதால் நிம்மதி குறைவு ஏற்படும்.

    துலாம் - புதன் சஞ்சாரம்

    உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் ஐப்பசி 6-ந் தேதி துலாம் ராசிக்கு செல்கிறார். 8-க்கு அதிபதி 9-ல் வரும் போது தொழிலில் சில இழப்புகளைச் சந்திக்க நேரிடும். இடமாற்றம், வீடு மாற்றங்களால் விரயங்கள் ஏற்படும். பிள்ளைகளால் சில பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். முன்னோர் வழிச் சொத்துக்களால் முறையான பங்கீடுகள் கிடைக்கும். என்றாலும் அவை கைக்கு வந்து சேருவதில் தாமதம் உருவாகும். 'ஒரு மடங்கு வரவு வந்தால் இரு மடங்கு செலவு ஆகின்றதே' என்று கவலைப்படுவீர்கள். வாக்கு ஸ்தானாதிபதி வக்ர இயக்கத்தில் இருப்பதால், உங்கள் பேச்சே உங்களுக்கு எதிரிகளை உருவாக்கலாம். எனவே எதையும் யோசித்து பேசுவது நல்லது.

    மிதுன - செவ்வாய் வக்ரம்

    ஐப்பசி 18-ந் தேதி, மிதுனத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், வக்ரம் பெறுவதோடு செவ்வாயின் பார்வையும் சனியின் மீது பதிவதால் மிகுந்த கவனம் தேவைப்படும். வீண் விரயங்களும், மனக்கசப்புகளும் அதிகரிக்கும். இக்காலத்தில் ஆன்மிகப் பயணங்களும், வழிபாடுகளும், அருளாளர்களின் ஆலோசனைகளும் கைகொடுக்கும். உத்தியோகத்தில் பிரச்சினை மேல் பிரச்சினை வந்து அலைமோதும். குடும்பச்சுமை கூடும். கொடுக்கல்-வாங்கல்களில் ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும்.

    விருச்சிக - புதன் சஞ்சாரம்

    ஐப்பசி 23-ந் தேதி, விருச்சிக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம, அஷ்டமாதிபதியாக விளங்குபவர் புதன். அவர் பத்தாம் இடத்திற்கு வரும் போது நன்மையும், தீமையும் கலந்தே நடக்கும். தொழில் வளர்ச்சியில் குறுக்கீடு ஏற்படத்தான் செய்யும். இருப்பினும் அதைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது அரிது.

    விருச்சிக - சுக்ரன் சஞ்சாரம்

    ஐப்பசி 26-ந் தேதி, விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன் 10-ம் இடத்திற்கு வரும்பொழுது தொழில் வளம் சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஏழரைச் சனி நடப்பதால் சில நேரங்களில் வெற்றி கைநழுவியும் செல்லலாம். கடன் சுமை குறைய புதிய வழிபிறக்கும். நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வருகின்ற நேரம் இது.

    குரு வக்ர நிவர்த்தி

    உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குருபகவான், மாதத் தொடக்கத்தில் வக்ரமாக இருக்கிறார். ஐப்பசி 30-ந் தேதி அவர் வக்ர நிவர்த்தியாகிறார். தன லாபாதிபதி வக்ர நிவர்த்தியாவதால் பொருளாதார மேம்பாடு அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அதிக முயற்சி எடுத்தும் இதுவரை முடியாத காரியங்கள் இனி இனிதாக முடிவடையும். குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் அகலும். பங்குதாரர்களால் கூடுதல் நன்மை கிடைக்கும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    அக்டோபர்: 25, 26, 30, 31, நவம்பர்: 5, 6, 10, 11.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.

    கும்பம் - Kumbam

    தமிழ் மாத ராசிப்பலன்

    18.9.22 முதல் 17.10.22 வரை

    எடுத்த கொள்கை மாறாமல் லட்சியத்தை நோக்கிப் பயணிக்கும் கும்ப ராசி நேயர்களே!

    புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனியும், தன-லாபாதிபதி குருவும் வக்ர இயக்கத்தில் இருக்கின்றனர். எனவே எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது.

    கன்னி - சுக்ரன் சஞ்சாரம்

    புரட்டாசி 8-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் சுக்ரன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் குறையும். விட்டுக் கொடுத்துச் செல்வது, இட மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் நல்ல பலன்களை வரவழைத்துக் கொள்ளலாம்.

    கன்னி - புதன் சஞ்சாரம்

    புரட்டாசி 16-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் புதன், அங்கு உச்சம் பெறுகிறார். பஞ்சம, அஷ்டமாதிபதியான புதன் உச்சம் பெறுவது நன்மைதான். இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் வந்துசேரும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். பெண் பிள்ளைகளின் சுபச்சடங்குகள் நடைபெறுவதில் கவனம் செலுத்துவீர்கள். வாகன மாற்றம் செய்ய முன்வருவீர்கள்.

    மிதுன - செவ்வாய் சஞ்சாரம்

    புரட்டாசி 22-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது புதிய பாதை புலப்படும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. பாகப்பிரிவினை சுமுகமாகும். தொழில் தொடங்குவது பற்றி சிந்திப்பீர்கள். நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரலாம்.

    இக்காலத்தில் மிதுனத்தில் உள்ள செவ்வாய், மகரத்தில் உள்ள சனியைப் பார்க்கிறார். இதனால் விரயங்கள் கூடும். பயணங்கள் அதிகரிக்கும். எலும்பு, நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படலாம். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு, கூட்டாளிகளால் மனக்கலக்கம் ஏற்படும். ஆற்றல்மிக்கவர்கள் அருகில் இருந்தாலும், அவர்களின் உதவி கிடைக்காது. இடமாற்றம், ஊர்மாற்றம் உத்தியோக மாற்றம் போன்றவை எதிர்பாராத விதத்தில் வந்துசேரும்.

    சனி வக்ர நிவர்த்தி

    புரட்டாசி 23-ந் தேதி, சனி வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிநாதன் வக்ர நிவர்த்தியாவது ஒருவழிக்கு நன்மைதான் என்றாலும், அவர் விரயாதிபதியாக வலுவடைவதால் விரயங்கள் அதிகரிக்கும். ஆரோக்கியத் தொல்லை அகல, அதிகமாக செலவழிப்பீர்கள். கல்யாணம், காதுகுத்துவிழா, ஆன்மிகச் சுற்றுலா போன்றவற்றிற்காகவும் செலவிடுவீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். வேலை மாற்றம் உறுதியாகலாம். அது உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும் வேலையாக அமையும்.

    இம்மாதம் பைரவர் வழிபாடு வளர்ச்சியைக் கூட்டும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-செப்டம்பர்: 18, 29, 30, அக்டோபர்: 2, 3, 9, 10, 14, 15.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

    பெண்களுக்கான பலன்கள்

    இம்மாதம் விரயாதிபதி சனியும், தனாதிபதி குருவும் வக்ர இயக்கத்தில் இருப்பதால், செலவு கூடும். பாசம் காட்டியவர்கள் பகையாகலாம். கணவன் - மனைவிக்குள் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு செயல்பட்டால் நன்மை வந்து சேரும். பிள்ளைகளுக்கு வேலையும், மண மாலையும் கிடைக்கும் யோகம் உண்டு. பணிபுரிபவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். ஆனால் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பது அரிது.

    கும்பம் - Kumbam

    தமிழ் மாத ராசிப்பலன்

    17.8.2022 முதல் 17.9.2022 வரை

    எந்த காரியத்திலும் யோசித்து முடிவெடுக்க வேண்டுமென்று சொல்லும் கும்ப ராசி நேயர்களே!

    ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் விரயாதிபதி சனி, விரய ஸ்தானத்திலேயே வக்ரம் பெற்றிருக்கிறார். எனவே வரவும், செலவும் சமமாகும்.

    சிம்ம - சூரியன் சஞ்சாரம்

    உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானத்திற்கு அதிபதியான சூரியன், சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது தேங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். செல்வநிலை திருப்தி தரும். சுபகாரியங்கள் நடைபெறும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டில் பணிபுரிய அழைப்புகள் வரலாம். குடும்பத்தில் நிலவிய வாக்குவாதம் சுமுகமாகும். பெற்றோரின் உடல்நலம் சீராகும்.

    கன்னி - புதன் சஞ்சாரம்

    ஆவணி 8-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் புதன், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம - அஷ்டமாதிபதியான புதன், உச்சம் பெறும் போது பிள்ளைகள் வழியில் சுபச்செலவு ஏற்படும். பாகப்பிரிவினையில் இருந்த தடை அகலும். பணிபுரியும் இடத்தில் தொல்லை தந்த மேலதிகாரிகள் இடமாற்றம் பெறுவர்.

    வக்ர புதன் சஞ்சாரம்

    ஆவணி 12-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் வக்ர இயக்கத்தில் செல்கிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம - அஷ்டமாதிபதியான புதன் வக்ரம் பெறுவதால் நன்மையும் தீமையும் கலந்தே நடைபெறும். பிள்ளைகளால் சில பிரச்சினைகள் தலைதூக்கும். அவர்களை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள். அண்ணன், தம்பிகளுக்குள் அனுசரணை அவசியம். உத்தியோகத்தில் வீண்பழிகள் ஏற்படலாம். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது.

    சிம்ம - சுக்ரன் சஞ்சாரம்

    ஆவணி 16-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், சப்தம ஸ்தானத்திற்கு வருவது யோகம்தான். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பச்சுமை கூடுதலாக இருந்தாலும், அதைச் சமாளிக்கும் ஆற்றல் பிறக்கும். அலுவலகத்தில் கேட்டிருந்த சலுகைகள் கிடைக்கப்பெறும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கலாம்.

    குரு வக்ரமும், சனி வக்ரமும்

    மாதம் முழுவதும் குருவும், சனியும் வக்ரமாக இருக்கிறார்கள். உங்கள் ராசிக்கு தன ஸ்தானம் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியான குரு வக்ரம் பெறும்போது பொருளாதார பற்றாக்குறை ஏற்படும். கொடுக்கல் -வாங்கலில் பிரச்சினைகள் உருவாகும். சனியின் வக்ர இயக்கத்தைப் பொறுத்தவரை நன்மை தரக்கூடியதாக இருக்கும். விரயாதிபதி சனி வக்ரம் பெறும் போது, வீடு கட்டுவது, இடம் வாங்குவது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். கடன்சுமை ஓரளவு குறையும்.

    இந்த மாதம் சனிக்கிழமை தோறும் கிருஷ்ணர் வழிபாடு நன்மையைத் தரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஆகஸ்டு: 19, 20, 31, செப்டம்பர்: 1, 5, 6, 12, 13

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.

    பெண்களுக்கான பலன்கள்

    இம்மாதம் விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம், இடமாற்றம் உருவாகலாம். கணவன் - மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடு மறையும். பிள்ளைகளுக்கு படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்கு, புதிய இடத்தில் இருந்து வேலைவாய்ப்புகள் வரலாம். ஏழரைச் சனியில் விரயச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால் புதிய வேலையில் சேரலாமா? என்பதை சுய ஜாதகம் பார்த்து முடிவெடுங்கள்.

    கும்பம் - Kumbam

    தமிழ் மாத ராசிப்பலன்

    17-07-2022 முதல் 16-08-2022 வரை

    அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும் கும்ப ராசி நேயர்களே!

    ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி விரய ஸ்தானத்தில் வக்ரம் பெற்றிருக்கிறார். வெற்றிகள் ஸ்தானத்தில் ராகுவும், பாக்கிய ஸ்தானத்தில் கேதுவும் இருக்கிறார்கள். எனவே விரயங்கள் அதிகரிக்கும்.

    ஆடி 13-ந் தேதி, சிம்ம ராசிக்குப் புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். பஞ்சம -அஷ்டமாதிபதியான அவர் சப்தம ஸ்தானத்திற்கு வரும்பொழுது பிள்ளைகள் வழியில் சுபவிரயங்கள் ஏற்படும். மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும். தொழிலில் வருமானம் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சகப் பணியாளர் களால் சிறு தொல்லைகள் வரலாம்.

    ஆடி 22-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 6-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. தொழில் மேம்பாட்டிற்கு பெற்றோரின் ஒத்துழைப்பு உண்டு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

    ஆடி 23-ந் தேதி, மீன ராசியில் குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. தனாதிபதி குரு வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. பொருளாதாரத்தில் பற்றாக்குறை ஏற்படும். புதிய மனிதர்களை நம்பி எதையும் செய்ய வேண்டாம். குடும்பப் பிரச்சினை அதிகரிக்கலாம். கொடுக்கல் - வாங்கல்களில் ஏமாற்றம் வரக்கூடும். புதிய முயற்சிகளில் ஈடுபடும் பொழுது ஆலோசித்து முடிவெடுங்கள். லாப ஸ்தானத்திற்கும் அதிபதியாக குரு விளங்குவதால், லாபம் வருவதில் சிறு குறுக்கீடு ஏற்படும். பங்குதாரர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்ள மாட்டார்கள். தொழில் பிரச்சினை அதிகரிக்கும். விற்பனைப் பிரதிநிதிகளை அனுசரித்துச் செல்லுங்கள். உங்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் மற்றவர்களுக்குப் போகலாம்.

    ஆடி 25-ந் தேதி, ரிஷப ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் 4-ம் இடத்திற்கு வரும்போது நல்ல பலன்கள் கிடைக்கும். உடல்நலம் சீராகி உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். உடன்பிறப்புகள் உறுதுணையாக இருப்பர். உடன்பிறந்தவர்களின் இல்லங்களில் நடைபெறும் மங்கல நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.

    இம்மாதம் சனிக்கிழமை தோறும் ராமபிரான், சீதா தேவி வழிபாடு செய்வதன் மூலம் நன்மை கிடைக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூலை: 19, 20, 23, 24, ஆகஸ்டு: 4, 5, 9, 10, 11, 15, 16 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

    பெண்களுக்கான பலன்கள்

    இம்மாதம் விரயச் சனியின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. சனி வக்ரம் பெற்றிருப்பதால் விரயங்கள் அதிகரிக்கும். குடும்பச்சுமை கூடும். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டிய நேரம் இது. பிள்ளைகளின் வழியிலும், உறவினர்கள் வழியிலும் பிரச்சினைஉருவாகலாம். பணிபுரியும் இடத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சலுகைகள் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படும். உயரதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

    கும்பம் - Kumbam

    தமிழ் மாத ராசிப்பலன்

    ஆனி மாத ராசி பலன்கள் 15-06-2022 முதல் 16-07-2022 வரை

    கடமைகளை சரிவரச் செய்து வர வேண்டும் என்று சொல்லும் கும்ப ராசி நேயர்களே!

    ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சனி வக்ர இயக்கத்தில் விரய ஸ்தானத்தில் இருக்கிறார். விரயாதிபதி வக்ரம் பெறுவது நன்மைதான். விரயத்திற்கேற்ற வருமானம் வந்து கொண்டே இருக்கும்.

    ஆனி 4-ந் தேதி, ரிஷப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் நல்ல நேரமாகும். தாய்வழி ஆதரவு உண்டு. வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட தூரத்திற்கான மாறுதல்கள் வந்து சேரலாம்.

    ஆனி 11-ந் தேதி, மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும். எனவே தாமதப்பட்ட காரியங்கள், தடையின்றி நடைபெறும். பிள்ளைகள் வழியில் உள்ள பிரச்சினைகள் படிப்படியாக மாறும். அவர்களின் மேற்படிப்பு சம்பந்தமாகவோ, வெளிநாடு சென்று பணிபுரிவது சம்பந்தமாகவோ ஏதேனும் ஏற்பாடு செய்திருந்தால் அதில் வெற்றி கிடைக்கும்.

    ஆனி 12-ந் தேதி மேஷ ராசிக்கு செவ்வாய் செல்கின்றார். செவ்வாய்க்கு மேஷம் சொந்த வீடாகும். உங்கள் ராசிக்கு சகாய ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கு அதிபதி செவ்வாய். எனவே அவர் பலம்பெறும் இந்த நேரம் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் நட்பு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் உயர்அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

    ஆனி 28-ந் தேதி, கடக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம அஷ்டமாதிபதியானவர் புதன். அவர் 6-ம் இடத்திற்கு வரும் நேரம் 'விபரீத ராஜயோகம்' செயல்படும். எனவே திட்டமிடாத நல்ல காரியங்கள் நடைபெற்று மகிழ்ச்சியைத் தரும். எதிரிகள் விலகுவர். லாப நோக்கத்தோடு பழகியவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சுயதொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர்.

    ஆனி 29-ந் தேதி, மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் பஞ்சம ஸ்தானத்திற்கு செல்லும்பொழுது அங்குள்ள சூரியனோடு இணைவதால் அரசு வழி அனுகூலம் உண்டு. நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். அதிகாரிகளின் அன்புக்கு பாத்திரமாகி, உத்தியோகத்தில் உயர்ந்த நிலையைக் காண்பீர்கள். சக ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

    இம்மாதம் புதன்கிழமை தோறும் அனுமனை வழிபடுங்கள்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூன்: 15, 16, 22, 23, 26, 27, ஜூலை: 9, 10, 15, 16 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.

    பெண்களுக்கான பலன்கள்

    இம்மாதம் விரயச் சனி வக்ரம் பெற்றிருப்பதால் சுபவிரயங்கள் அதிகரிக்கும். பொருளாதார நிலை திருப்தி தரும். குடும்பத்தில் உள்ளவர்களின் குறைகளைத் தீர்க்க முன்வருவீர்கள். கணவன் - மனைவிக்குள் பாசமும், நேசமும் அதிகரிக்கும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. பணிபுரியும் இடத்தில் பணிவு தேவை. மேலதிகாரிகள் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

    கும்பம் - Kumbam

    தமிழ் மாத ராசிப்பலன்

    வைகாசி மாத ராசி பலன்கள் 15-05-2022 முதல் 14-06-2022 வரை

    ஏன்? எதற்கு? என்ற கேள்விகளை அடிக்கடி கேட்கும் இயல்புடைய கும்ப ராசி நேயர்களே!

    வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் ஏழரைச் சனியில் விரயச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் எதிர்பாராத விதத்தில் விரயங்கள் ஏற்படும்.

    மீன - செவ்வாய் சஞ்சாரம்

    வைகாசி 3-ந் தேதி, மீன ராசிக்குச் செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் தன ஸ்தானத்திற்கு செல்லும்பொழுது உடன்பிறப்புகளின் முன்னேற்றம் திருப்தி தரும். செவ்வாய் குருவோடு இணைவதால் 'குருமங்கள யோகம்' உருவாகிறது. எனவே நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும்.

    சனி - செவ்வாய் பார்வைக் காலம்

    வைகாசி 3-ந் தேதி முதல் மாதக் கடைசி வரை, மீனத்தில் உள்ள செவ்வாயை மகரத்தில் உள்ள சனி பார்க்கப் போகின்றார். எனவே இக்காலத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் பிரச்சினை அதிகரிக்கும். விரயங்களால் மனக்கலக்கம் ஏற்படும்.

    புதன் வக்ர நிவர்த்தியும், ரிஷப சஞ்சாரமும்

    வைகாசி 7-ந் தேதி, மேஷ ராசியில் புதன் வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம அஷ்டமாதிபதியான புதன் வக்ர நிவர்த்தியாவதால் பிள்ளை கள் வழியில் சுபகாரியங்கள் நடைபெறும். வீடுமாற்றம் செய்ய முன்வருவீர்கள். வைகாசி 23-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். இக்காலத்தில் 'புத ஆதித்ய யோகம்' உருவாகின்றது. எனவே பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். புனிதப் பயணங்களும் உண்டு.

    மேஷ - சுக்ரன் சஞ்சாரம்

    இதுவரை உச்சம் பெற்று மீனத்தில் சஞ்சரித்து வந்த சுக்ரன், வைகாசி 10-ந் தேதி மேஷ ராசிக்கு வருகிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், சகாய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் நன்மைகள் அதிகம் கிடைக்கும். குறிப்பாக இடம், வீடு வாங்கும் யோகம் உண்டு. கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். பொருளாதாரத்தில் மேம்பாடு அதிகரிக்கும். நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும்.

    மகரச் சனியின் வக்ர காலம்

    வைகாசி 11-ந் தேதி, மகரத்தில் சனி வக்ரம் பெறுகிறார். என்றாலும் கூட ராசிநாதனாகவும் சனி இருப்பதால் ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. பொருளாதாரப் பற்றாக்குறை அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடும்பொழுது அனுபவஸ்தர்களை ஆலோசித்துச் செய்வது நல்லது. உறவினர்களுக்கு உதவி செய்யப் போய், அது உபத்திரவமாய் முடியலாம். பணிபுரியும் இடத்தில் பக்குவமாய் நடந்துகொள்வது நல்லது. நண்பர்களை நம்பி எதையும் செய்ய இயலாது. தடைப்பட்ட நோய் மீண்டும் தலைதூக்கும்.

    இம்மாதம் சனிக்கிழமை தோறும் சனி பகவானை வழிபடுவது நல்லது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மே: 16, 17, 21, 22, 27, 28, ஜூன்: 2, 3, 12, 13, 14 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- இளஞ்சிவப்பு.

    பெண்களுக்கான பலன்கள்

    இம்மாதம் விரயச் சனியின் ஆதிக்கத்தால் குடும்பச் சுமை கூடும். வருமானப் பற்றாக்குறை ஏற்படும். கணவன் - மனைவிக்குள் பிணக்குகள் அகன்று இணக்கம் ஏற்பட, விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். பிள்ளைகளின் வழியில் நல்ல காரியங்கள் நடைபெறும். சுபவிரயங்கள் செய்வதன் மூலம் வீண் விரயங்களில் இருந்து தப்பிக்க இயலும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பது அரிது. சகப் பணியாளர்களால் சில தொல்லைகள் ஏற்படலாம்.

    ×