வழிபாடு

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கார்த்திகை தீபத் திருநாள் சொக்கப்பனை பந்தலுக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது

Published On 2025-11-27 14:44 IST   |   Update On 2025-11-27 14:44:00 IST
  • கார்த்திகை கோபுரம் அருகே சொக்கப்பனை அமைக்கப்பட்டு கொளுத்தப்படும்.
  • கோவில் யானைகள் ஆண்டாள், லெஷ்மி தும்பிக்கையை உயர்த்தி மரியாதை செலுத்தின.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வரும் 5-ந்தேதி கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கோவிலின் கார்த்திகை கோபுரம் அருகே சொக்கப்பனை அமைக்கப்பட்டு கொளுத்தப்படும். அதனை நம்பெருமாள் கதிர் அலங்காரத்தில் எழுந்தருளி கண்டருளுவார்.

கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சொக்கப்பனை பந்தல் அமைக்க முகூர்த்தக்கால் நடும் விழா கார்த்திகை கோபுரம் அருகே இன்று காலை 10.45 மணியளவில் மகர லக்னத்தில் நடைபெற்றது. அதுசமயம் சுமார் 20 அடி உயரம் உள்ள தென்னை மரக்காலின் நுனியில் சந்தனம், மாவிலை மற்றும் பூமாலை உள்ளிட்ட மங்களப்பொருட்கள் அணிவிக்கப்பட்டு கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல புனிதநீர் தெளிக்கப்பட்டது.

அதன் பின்னர் முகூர்த்தக்காலை கோவில் ஊழியர்கள் நட்டனர். அப்போது கோவில் யானைகள் ஆண்டாள், லெஷ்மி தும்பிக்கையை உயர்த்தி மரியாதை செலுத்தின.

இந்நிகழ்ச்சியில் கோவில் அலுவலர்கள் மற்றும் கைங்கர்யபரார்கள் கலந்து கொண்டனர். இந்த பந்தல் காலை சுற்றி சுமார் 15 அடி அகலத்திற்கும் 20 அடி உயரத்திற்கும் சொக்கப்பனை அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

Tags:    

Similar News