உலகம்

வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.300-ஐ தொட்டது

Published On 2023-09-02 05:19 GMT   |   Update On 2023-09-02 05:55 GMT
  • விலைவாசி உயர்வால் அவதியடைந்து வரும் மக்கள் கடுமையான பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
  • விலை உயர்வை கண்டித்து கராச்சியில் மக்கள் போராட்டம் நடத்தினர்.

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. குறிப்பாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.

சில நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் ரூ.280-க்கு மேல் விற்றது.

இந்தநிலையில் பாகிஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.300-ஐ தாண்டி உள்ளது.

பாகிஸ்தானில் தற்போதுள்ள காபந்து அரசாங்கம், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.14.91 உயர்த்தி உள்ளது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.305.36-க்கு விற்கப்படுகிறது. டீசல் லிட்டருக்கு ரூ.18.44 உயர்த்தப்பட்டு ரூ.311.84-க்கு விற்கிறது.

மண்எண்ணெய் விலை உயர்த்தப்படவில்லை. கடந்த ஆகஸ்டு 15-ந்தேதி காபந்து அரசாங்கம், எரிபொருளின் விலையை லிட்டருக்கு ரூ.20 வரை உயர்த்தி இருந்த நிலையில் இரண்டு வாரங்களில் மேலும் விலையை அதிக அளவில் உயர்த்தி உள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

விலைவாசி உயர்வால் அவதியடைந்து வரும் மக்கள் இந்த கடுமையான பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

விலை உயர்வை கண்டித்து கராச்சியில் மக்கள் போராட்டம் நடத்தினர். அதேபோல் மற்ற இடங்களிலும் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பாகிஸ்தான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் கேட்டுள்ளது. இதற்காக சர்வதேச நாணய நிதியம் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.

இதில் மானியங்களை தவிர்க்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News