உலகம்

பாகிஸ்தானில் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

Published On 2023-03-27 07:19 GMT   |   Update On 2023-03-27 07:19 GMT
  • கோதுமை, தக்காளி, மாவு, உருளைக்கிழங்கு, வாழைப்பழம் உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
  • பெரும்பாலான நகர்புறம் மற்றும் கிராம புறங்களில் இரவு 10 முதல் காலை 10 மணி வரை 12 மணி நேரம் வரை மின்சாரம் நிறுத்தப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இஸ்லாமாபாத்:

நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அந்நாடு கடனில் தத்தளித்து வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அனைத்தும் விண்ணை முட்டும் வகையில் உயர்ந்து விட்டது.

கோதுமை, தக்காளி, மாவு, உருளைக்கிழங்கு, வாழைப்பழம் உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் அந்த பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து விட்டது.

வாழைப்பழம் டஜன் ரூ.250 முதல் ரூ.500-க்கு விற்பனை ஆகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர். தொடர் மின்வெட்டும் பொதுமக்களை பாடாய்படுத்தி வருகிறது. பெரும்பாலான நகர்புறம் மற்றும் கிராம புறங்களில் இரவு 10 முதல் காலை 10 மணி வரை 12 மணி நேரம் வரை மின்சாரம் நிறுத்தப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதனால் பல பகுதிகள் இருளில் மூழ்கி உள்ளன.

தற்போது ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லீம்கள் நோன்பு இருந்து வருகின்றனர். அவர்கள் இந்த மின் தடையால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் மின்வெட்டை கண்டித்து பொது மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டமும் நடத்த தொடங்கி உள்ளனர். நேற்று கைபர் பக்துங்கா மாகாணத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். மின் வெட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News