உலகம்

மாலி நாட்டில் ஆயுதக்குழு தாக்குதலில் ராணுவ வீரர்கள் 10 பேர் பலி

Published On 2023-09-13 10:29 GMT   |   Update On 2023-09-13 10:41 GMT
  • கடந்த 2015-ம் ஆண்டு கிளர்ச்சியை தடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டதை மீறியுள்ளது.
  • தாக்குதல் சம்பவங்களால் மாலி வடக்கு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பமாகோ:

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் கிளர்ச்சியாளர் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆயுதக்குழுவினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் வடக்கு மாலியில் காவோ பிராந்தியத்தில் உள்ள பர்ம் நகரில் ராணுவ வீரர்கள் மீது ஆயுத குழுவினர் திடீரென்று தாக்குதல் நடத்தினர். இதில் 10 வீரர்கள் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக மாலியின் ராணுவ செய்தித் தொடர்பாளர் சவுலிமேன் கூறும்போது,பயங்கரவாதிகளின் கண்ணி வெடியில் சிக்கி பல வாகனங்கள், மோட்டார் சைக்கிள் சேதமடைந்தன என்றார். மேலும் இந்த சம்பவத்தில் 13 வீரர்கள் காயமடைந்ததாகவும், தாக்குதல் நடத்தியவர்களில் 46 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு முன்னாள் கிளர்ச்சியாளர்கள் கூட்டணி குழு பொறுப்பேற்றுள்ளது. அக்குழு கடந்த 2015-ம் ஆண்டு கிளர்ச்சியை தடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை மீறியுள்ளது.

சமீபத்தில் நைஜர் ஆற்றின் திம்புக்கு நகருக்கு அருகே பயணிகள் படகை குறி வைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 49 பொதுமக்கள், 15 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற தாக்குதல் சம்பவங்களால் மாலி வடக்கு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News