உலகம்

"இந்திய தொழிலாளர்களிடம் பாகுபாட்டை வளர்க்கவில்லை": வருத்தம் தெரிவித்த அமைச்சர்

Published On 2024-03-05 11:02 GMT   |   Update On 2024-03-05 11:02 GMT
  • வடகிழக்கு இந்தியர்கள் தோற்றத்தில் தைவான் நாட்டினரை போல் உள்ளனர் என்றார் அமைச்சர்
  • தவறாக புரிந்து கொள்ளப்பட்ட என் கருத்துகளுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன் என்றார் சூ மிங்-சுன்

கிழக்கு ஆசியாவில் உள்ள நாடு, தைவான் (Taiwan). இதன் தலைநகரம் தைபே (Taipei).

தைவான் நாட்டின் தொழிலாளர் துறை அமைச்சர், சூ மிங்–சுன் (Hsu Ming-chun), சில தினங்களுக்கு முன் அந்நாட்டில் பல்வேறு துறைகளில் நிலவும் தொழிலாளர் தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் வெளிநாடுகளிலிருந்து ஊழியர்கள் வருவதை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் குறித்து பேட்டியளித்தார்.

அந்த பேட்டியில் மிங்–சுன் தெரிவித்ததாவது:

தைவான் தொழிலாளர் துறை, வடகிழக்கு இந்திய மக்களை பணியில் அமர்த்த முன்னுரிமை வழங்க உள்ளது.

ஏனென்றால் அவர்களின் தோற்றம், தோல் நிறம், உணவு பழக்கவழக்கங்களும் தைவான் நாட்டு மக்களுடன் பெருமளவு ஒத்து போகிறது.

மேலும், இப்பகுதியில் உள்ள மக்கள் (பெரும்பாலும் கிறித்துவர்கள்) கட்டுமானத்துறை, உற்பத்தித் துறை, விவசாயம் உள்ளிட்டவைகளில் திறன் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர்.

இவ்வாறு மிங்–சுன் தெரிவித்தார்.

பாகுபாடுகளை வளர்க்கும் விதமாக மிங்–சுன் கூறிய கருத்துகள் உள்ளதாக இந்தியாவில் அவரது பேச்சிற்கு எதிராக கண்டனங்கள் வலுத்தது.

இதை தொடர்ந்து, இன்று, அமைச்சர் மிங்–சுன், "இந்திய பணியாளர்களின் திறமையை மேம்படுத்தி நான் பேச முற்பட்டது, தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது. தவறாக புரிந்து கொள்ளப்பட்ட என் கருத்துகளுக்கு நான் வருத்தம் தெரிவிக்கிறேன். உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு பணியாளர்கள் அனைவருக்கும் இடையே எந்தவித பாகுபாடுகளும் இல்லாத வகையில்தான் தைவானின் தொழிலாளர் நல சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன," என தெரிவித்தார்.

தைவானின் தொழிலாளர் துறை மற்றும் வெளியுறவுத் துறை, முன்னரே அமைச்சரின் பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியர்களை பணியில் அமர்த்தும் ஒரு நாடு, இந்திய மாநிலங்களில் ஒரு சில பகுதிகளை குறிப்பிட்டு முன்னுரிமை வழங்க உள்ளதாக கூறியது இதுவே முதல்முறை.

Tags:    

Similar News