செய்திகள்
ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ்

நவராத்திரி வாழ்த்துக்களை தெரிவித்தனர் அமெரிக்க அதிபர், துணை அதிபர் வேட்பாளர்கள் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ்

Published On 2020-10-17 16:40 GMT   |   Update On 2020-10-17 16:40 GMT
அமெரிக்க அதிபர், துணை அதிபர் வேட்பாளர்களான ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் நவராத்திரி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 3-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் அதிபர் பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டெனால்டு டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிடுகின்றனர். 

அதேபோல் துணை அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபராக உள்ள மைக் பென்ஸ் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

இந்த தேர்தலில் வெற்றிபெற இரு கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்குச்சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்குகள் வெற்றியை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. 

இதனால், அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்குகளை கைப்பற்றும் முயற்சியில் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், இந்துக்களின் பண்டிகளில் மிகவும் முக்கியமான பண்டிகையான நவராத்திரி பண்டிகை கொண்டாட்டங்கள் இன்று தொடங்கியுள்ளது. 

இந்நிலையில், இந்துக்களின் நவராத்திரி பண்டிகைக்கு அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபர் வேட்பாளர்களான ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் வாழ்த்துத்தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஜோ பைடன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துப்பதிவில், ‘ இந்துக்களின் பண்டிகையான நவராத்திரி தொடங்கியுள்ள நிலையில், இந்த பண்டிகையை அமெரிக்காவிலும், உலகம் முழுவதும் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் நானும் எனது மனைவி ஜில் பைடனும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேம்’ என தெரிவித்துள்ளார்.

அதேபோல், கலமா ஹாரிஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துப்பதிவில், ‘ எங்கள் இந்து அமெரிக்க நண்பர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மேலும், நவராத்திரியை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 

இந்த நவராத்திரி விடுமுறைகள் நமது சமூகங்களை உயர்த்துவதற்கு நம் அனைவருக்கும் உத்வேகமாகவும் செயல்பட்டு அனைவரையும் உள்ளடக்கிய அமெரிக்காவை உருவாக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News