செய்திகள்

வெனிசுலா அதிபர் மதுரோவின் நாட்கள் எண்ணப்படுகின்றன- அமெரிக்கா மறைமுக எச்சரிக்கை

Published On 2019-02-25 03:50 GMT   |   Update On 2019-02-25 03:50 GMT
வெனிசுலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவின் நாட்கள் எண்ணப்படுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். #VenezuelaCrisis #VenezuelaBorderClashes #JuanGuaido
கராகஸ்:

வெனிசுலாவில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அரசியல் குழப்பமும் தொடர்ந்து நீடிக்கிறது. வெனிசுலாவின் இடைக்கால அதிபராக தன்னை அறிவித்துக்கொண்ட ஜூவான் குவைடோவுக்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்ததால், அந்த நாடுகளிடம் இருந்து மனிதாபிமான உதவிகளை பெற அதிபர் நிகோலஸ் மதுரோ மறுக்கிறார்.

ஆனால் உதவி பொருட்களை கொண்டு வரும் முயற்சியில் ஜூவான் குவைடோ ஈடுபட்டுள்ளார். ஆனால் உணவுப்பொருட்கள் கொண்டு வரும் வாகனங்கள் வெனிசுலாவுக்குள் நுழையாத படி நாட்டின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் உணவு மற்றும் மருந்து பொருட்கள் கொண்ட உதவி பொருட்களை பெறுவதற்காக எல்லையைத் தாண்டும் முயற்சியில் வெனிசுலா மக்கள் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதோடு, ரப்பர் குண்டுகளால் சுட்டனர். இதனால் கலவரம் வெடித்தது.



இந்த கலவரத்தில் 14 வயது சிறுவன் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். இதனால் எல்லையோர நகரங்களில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. வெனிசுலாவை விடுவிக்க சர்வதேச சமுதாயம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என ஜூவான் குவைடோ வேண்டுகோள் விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு சர்வதேச அளவில் நெருக்கடி அதிகரித்துள்ளது. இதனையடுத்து நிகோலஸ் மதுரோவின் அரசுக்கு ஐரோப்பிய யூனியன், பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பொதுமக்கள் கொல்லப்பட்டது வருத்தம் அளிப்பதாக ஐநா சபை தெரிவித்துள்ளது. வன்முறை தவிர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நிகோலஸ் மதுரோவின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்று அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ கூறியுள்ளார். எல்லையில் அரசு ஆதரவாளர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதாகவும், வெனிசுலா மக்களுக்கு ஜனநாயக உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்வதே தங்களது ஒரே நோக்கம் என்றும் அவர் கூறினார்.

ஜூவான் குவைடோவுக்கு ஆதரவு அளித்து மனிதாபிமான உதவிகள் வருவதற்கு அனுமதிக்க வேண்டும் என வெனிசுலா பாதுகாப்பு படைகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கனவே வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது. #VenezuelaCrisis #VenezuelaBorderClashes #JuanGuaido
Tags:    

Similar News