தமிழ்நாடு செய்திகள்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானைகள் எண்ணிக்கை 780 ஆக உயர்வு- அதிகாரி தகவல்

Published On 2025-08-12 11:43 IST   |   Update On 2025-08-12 11:43:00 IST
  • சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தாளவாடி, ஆசனூர், பர்கூர் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன.
  • . யானைகள் அதிக எண்ணிக்கையில் வனப்பகுதியில் இருந்தால் அந்த வனப்பகுதி வளமாக இருக்கும்.

ஈரோடு:

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 12-ந் தேதி உலக யானையில் தினமாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக வனப்பகுதிகளில் 3,063 யானைகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

யானைகளின் சாணத்தின் மூலம் 50-க்கும் மேற்பட்ட தாவர விதைகள் காடுகளில் பரப்புகின்றன. சாணத்தில் உள்ள பலவகை பூச்சி இனங்கள் பறவைகளுக்கு உணவாகின்றன. இவ்வாறு யானைகள் மூலம் பல்வேறு நன்மைகள் உள்ளன.

அதனால்தான் யானைகள் இருந்தாலும் ஆயிரம் பொன் செத்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள். தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் யானைகள் வாழ்வதற்கான உகந்த இடமாக உள்ளது. முதுமலை, சத்தியமங்கலம், ஆனைமலை மேகமலை, களக்காடு - முண்டந்துறை பகுதிகளில் யானைகள் அதிகம் வாழ்கின்றன.

இதுகுறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கள ஆய்வு இயக்குனர் ராஜ்குமார் கூறும்போது,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தாளவாடி, ஆசனூர், பர்கூர் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. யானைகள் வாழக்கூடிய உகந்த இடமாக இந்த வனப்பகுதி உள்ளது. கடைசியாக எடுத்த கணக்கெடுப்பின்படி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானைகளின் எண்ணிக்கை 720 -ல் இருந்து 780 ஆக உயர்ந்து உள்ளது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய வனப்பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் இருக்கும் சூழலில் சத்தியமங்கலம் வனப்பகுதியில் மட்டும் 25 சதவீதம் யானைகள் வசித்து வருகிறது.

தற்போது யானைகள் இடம்பெயரும் காலம் என்பதால் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்ந்து வருகிறது. யானைகள் அதிக எண்ணிக்கையில் வனப்பகுதியில் இருந்தால் அந்த வனப்பகுதி வளமாக இருக்கும்.

மேலும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனசரகத்தில் 780-க்கும் மேற்பட்ட யானைகள் இருப்பதாக கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. சத்தியமங்கலம் வனக்கோட்டத்தை பொறுத்தவரை யானை வேட்டையாடுவது தடுக்கப்பட்டுள்ளது. அதனால் யானைகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது யானைகளின் வழித்தடங்களில் எடுக்கப்பட்ட ஒட்டுமொத்தமாக கணக்கெடுப்பின் அடிப்படையில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது என்றார். 

Tags:    

Similar News