முழு கொள்ளளவை எட்டிய சோலையார் அணை நீர்திறப்பு - மதகுகள் வழியாக சீறிபாய்ந்த தண்ணீர்
- அணையில் இருந்து மதகுகள் வழியாக வெளியேறும் நீரானது கேரள வனப்பகுதிக்குள் சென்று அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை அடைகிறது.
- அணையின் பக்கவாட்டுப் பகுதியான சேடல் வழியாகவும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.
கனமழையால் வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆறு, நடுமலையாறு, பச்சைமலையாறு உள்ளிட்ட அனைத்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நீர்நிலைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்றும் வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
வால்பாறை அருகே சோலையார் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 165 அடியாகும். சோலையார் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் அணைக்கு நீர் வரத்து அதிகமாக இருந்தது.
நேற்று அணையின் நீர்மட்டம் 157 அடியாக இருந்தது. தொடர்ந்து மழை பெய்ததால் அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வந்தது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 163 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 6279 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 2466 கன அடி. நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சோலையார் அணை தனது முழு கொள்ளளவையும் எட்டியதை தொடர்ந்து பாதுகாப்பு கருதி அணை இன்று அதிகாலை திறக்கப்பட்டது.
அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் 4 மதகுகள் வழியாக சீறிப்பாய்ந்து சென்றது. அணையில் இருந்து மதகுகள் வழியாக வெளியேறும் நீரானது கேரள வனப்பகுதிக்குள் சென்று அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை அடைகிறது. பின்னர் அங்கிருந்து சென்று அரபிக்கடலில் கலக்கும்.
இதுதவிர அணையின் பக்கவாட்டுப் பகுதியான சேடல் வழியாகவும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் ஆனது மானாம்பள்ளி மின் உற்பத்தி நிலையத்திற்கு சென்று அங்கிருந்து வனப்பகுதி வழியாக பரம்பிக்குளம் அணையை அடைகிறது.
பின்னர் அங்கிருந்து தூணக்கடவு, சர்க்கார்பதி அணை வழியாக காண்டூர் கால்வாய்க்கு சென்று அங்கிருந்து அமராவதி அணைக்கு செல்கிறது.
வால்பாறை சுற்றுவட்டாரத்தில் பெய்த மழையின் அளவு மி.மீட்டரில் வருமாறு:
வால்பாறை-87, சின்னகல்லார்-121, சின்கோனா-81, சோலையாறு அணை-87 என பதிவாகி உள்ளது.