தமிழ்நாடு செய்திகள்

சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 3 தொழிலாளர்கள் உடல் கருகி பலி

Published On 2025-04-26 12:26 IST   |   Update On 2025-04-26 12:26:00 IST
  • 30-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
  • இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

சிவகாசி:

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் தற்போது உற்பத்தி பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கோடை காலம் என்பதால் விபத்துக்கள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தொழிலாளர் கவனமுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று மதியம் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் உடல் கருகி பலியானார்கள். அதன் விபரம் வருமாறு:-

சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டியில் தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். கோவில் திருவிழாக்களை முன்னிட்டு ஆர்டரின்பேரில் இந்த ஆலையில் பேன்சி ரக பட்டாசு தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். ஆலையில் உள்ள ஒரு அறையில் பட்டாசு தயாரிப்பதற்காக மருந்து கலவையை தொழிலாளர்கள் தயார் செய்து கொண்டிருந்தனர். அப்போது ரசாயன மாற்றம் காரணமாக உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. அருகில் இருந்த பட்டாசுகளில் தீ பரவி பயங்கர சத்தத்துடன் வெடிக்க தொடங்கியது. இதில் அடுத்தடுத்து இருந்த 5 அறைகள் இடிந்து தரைமட்டமாகின. இந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அவர்களது பெயர் விபரம் உடனடியாக தெரியவில்லை.

வெடி விபத்து குறித்து தகவலறிந்த சிவகாசி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்டு பணியில் ஈடுபட்டனர். அப்போது விபத்து நடந்த அறையில் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த 3 பேரை வீரர்கள் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டாசு ஆலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. 

Tags:    

Similar News