மேட்டூர் அணை நீர்மட்டம் 115.18 அடியை எட்டியது
- அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 59 ஆயிரத்து 123 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது.
- தற்போது அணையில் 85.99 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
மேட்டூர்:
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டிய பெய்ய தொடங்கியதால் கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகள் நிரம்பியது. இதையடுத்து உபரிநீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணை இந்தாண்டில் 6-முறை நிரம்பியது.
இதற்கிடையே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் அணைக்கு நீர்வரத்தும் குறைந்தது. ஆனாலும் நீர்வரத்தை விட அதிகளவில் காவிரி டெல்டா பாசனம் மற்றும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டம் 111 அடியாக குறைந்து காணப்பட்டது.
இந்த நிலையில் கர்நாடகாவில் தற்போது மீண்டும் மழை தீவிரம் அடைந்து உள்ளதால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உபரிநீர் அப்படியே தமிழகத்துக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நேற்று காலை முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.18 அடியாக உயர்ந்து காணப்பட்டது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 59 ஆயிரத்து 123 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது அணையில் 85.99 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.