தமிழ்நாடு செய்திகள்

இன்று குருத்தோலை ஞாயிறு: வேளாங்கண்ணியில், குருத்தோலையை கைகளில் ஏந்தியவாறு பவனி வந்த கிறிஸ்தவர்கள்

Published On 2025-04-13 11:49 IST   |   Update On 2025-04-13 11:49:00 IST
  • கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் முக்கிய நாளாக கருதப்படும் குருத்தோலை ஞாயிறு இன்று கடைபிடிக்கப்பட்டது.
  • வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது.

இந்த பேராலயம் மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தளமாகவும் திகழ்கிறது. இந்த ஆலயம் 'கீழை நாடுகளின் லூர்து நகர்' என்று அழைக்கப்படுகிறது.

இத்தகைய பல்வேறு சிறப்பு பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் புனித பயணமாக வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் முக்கிய நாளாக கருதப்படும் குருத்தோலை ஞாயிறு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கடைபிடிக்கப்பட்டது.

இதனையொட்டி காலை வேளாங்கண்ணியில் குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தியவாறு உன்னதங்களிலே ஒசன்னா என பாடல்கள் பாடியவாறு பவனியாக சென்றனர்.

பவனியானது பேராலயத்தின் முகப்பில் இருந்து தொடங்கி வேளாங்கண்ணியின் முக்கிய வீதிகள் வழியாக வந்து பேராலயத்தின் கீழ்க்கோவிலை அடைந்தது. தொடர்ந்து, பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

மேலும், பேராலயத்தில் கொங்கனி, மலையாளம், ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் சிறப்பு பிரார்தனையும் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News