தமிழ்நாடு செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 32 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

Published On 2025-08-21 11:59 IST   |   Update On 2025-08-21 11:59:00 IST
  • மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது.
  • காவிரி ஆற்றின் அழகை ரசிக்க மட்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

தருமபுரி:

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளதால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, கேரள மாநிலம் வயநாடு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வந்தது.

இதனால் கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணை க்கும், கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்தது.

இந்த இரு அணைகளிலும் இருந்தும் நேற்று வினாடிக்கு 55 ஆயிரத்து 450 கனஅடி நீர் தமிழகத்துக்கு காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் வினாடிக்கு 1 லட்சத்து 16 ஆயிரத்து 330 கனஅடி நீர் சென்ற நிலையில், நேற்று தண்ணீர் திறப்பு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு சற்று குறைந்துள்ளது.

இந்த தண்ணீர், கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று காலை 1 லட்சத்து 5 ஆயிரம் கனஅடி வந்தது. பின்னர் படிபடியாக நீர்வரத்து குறைய தொடங்கியது. மாலை 4 மணி அளவில் 50 ஆயிரம் கனஅடியாக வந்தது.

இதையடுத்து இன்றைய நிலவரப்படி நீர்வரத்து 32 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

இருப்பினும் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது.

நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மெயின் அருவி, ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 4-வது நாளாக மாவட்ட கலெக்டர் சதீஸ் தடை விதித்துள்ளார்.

இதனால் மெயின் அருவிக்கு செல்லும் பாதை பூட்டு போட்டு பூட்டப்பட்டது. சுற்றுலா பயணிகள் செல்லாதவாறு கேட்டு முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காவிரி ஆற்றின் அழகை ரசிக்க மட்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News