பயண அட்டை தொலைந்துவிட்டதா? இருப்புத் தொகை குறித்து சென்னை மெட்ரோ விளக்கம்
- மீதமுள்ள தொகையை எந்தச் சூழ்நிலையிலும் வேறு அட்டைக்கு மாற்றப்படவோ அல்லது திரும்பப் பெறவோ முடியாது.
- சிங்கார சென்னை அட்டையின் இருப்புத் தொகையை RBI/NPCI வழிகாட்டுதல்கள் மற்றும் வழங்குநர் கொள்கைகளின்படி திரும்பப் பெற முடியாது.
தொலைந்து போன பயண அட்டைகளில் உள்ள இருப்பு தொகையை வேறு பயண அட்டைக்கு மாற்ற இயலாது என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அறிவித்துள்ள மெட்ரோ நிர்வாகம்,
"சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பயண அட்டை மற்றும் சிங்கார சென்னை அட்டைகள் மெட்ரோ பயணம் மற்றும் வாகனம் நிறுத்தம் கட்டணங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
தொலைந்துபோன மெட்ரோ இரயில் பயண அட்டைகள் மற்றும் சிங்கார சென்னை அட்டைகளில் (CMRL Stored Value Cards and Singara Chennai (NCMC) Cards) மீதமுள்ள தொகையை எந்தச் சூழ்நிலையிலும் வேறு அட்டைக்கு மாற்றப்படவோ அல்லது திரும்பப் பெறவோ முடியாது. இதனால் பயணிகள் தங்கள் அட்டைகளைப் பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தொழில்நுட்ப ரீதியாக, தொலைந்துபோன சிங்கார சென்னை அட்டையின் இருப்புத் தொகையை RBI/NPCI வழிகாட்டுதல்கள் மற்றும் வழங்குநர் கொள்கைகளின்படி திரும்பப் பெற முடியாது. ஏனெனில் ஒரு அட்டை தொலைந்தால் அது வேறு ஒருவரால் தவறாக பயன்படுத்தபட வாய்புள்ளது. அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பான, நம்பகமான பயண அனுபவத்தை சென்னை மெட்ரோ இரயில் வழங்கி வருகிறது. இதனால் ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறோம், மேலும் மேம்பட்ட அமைப்புகளை நோக்கி நாங்கள் செயல்படும்போது, பயணிகளின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு மற்றும் கருத்துக்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்." என தெரிவித்துள்ளது.