தமிழ்நாடு செய்திகள்

குற்றால அருவிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு: 2-வது நாளாக அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை

Published On 2025-10-17 12:17 IST   |   Update On 2025-10-17 12:17:00 IST
  • அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது
  • கடுமையான வெள்ளப்பெருக்கு நீடித்து வருவதால் சிற்றாற்றிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

தென்காசி:

தென்காசி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் நேற்றும் இன்றும் ஆரஞ்சு அலட் விடுக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் தென்காசி மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்ததால் பிரதான சுற்றுலாத்தலமான குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

நேற்று இரவிலும் வனப்பகுதிக்குள் தொடர்ந்து மழை பெய்ததால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே உள்ளது. கடுமையான வெள்ளப்பெருக்கு நீடித்து வருவதால் சிற்றாற்றிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

இதனால் 2-வது நாளாக இன்றும் குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இன்றும் தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் நீர்நிலைகளை ஒட்டி அமைந்துள்ள குடியிருப்பு வாசிகள் எச்சரிக்கையுடன் இருக்கவும் நீர்நிலைகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News