தமிழ்நாடு

துணைவேந்தர் கைது எதிரொலி: பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 4 பேரிடம் போலீசார் விசாரணை

Published On 2024-01-04 10:15 GMT   |   Update On 2024-01-04 11:00 GMT
  • ஒரு வாரம் சூரமங்கலம் உதவி கமிஷனர் அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை ஜாமீனில் ஜெகநாதன் விடுவிக்கப்பட்டார்.
  • துணைவேந்தருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 7 பேரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.

சேலம்:

சேலம் கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருப்பவர் ஜெகநாதன் (66), பதிவாளர் (பொறுப்பு) தங்கவேல் (60), கணினி துறை இணை பேராசிரியர் சதீஷ்குமார் (45), திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ராம்கணேஷ் (54) ஆகியோர் இணைந்து அரசு அனுமதியின்றி பூட்டர் அறக்கட்டளை என்ற பெயரில் கல்வி நிறுவனம், அப்டெக்கான் போரம் என்ற பெயரில் மற்றொரு அமைப்பையும் தொடங்கியதாக புகார் கூறப்பட்டது.

இதுகுறித்து விசாரணை நடத்திய கருப்பூர் போலீசார் 4 பேர் மீதும் 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து ஜெகநாதனை கடந்த 26-ந் தேதி கைது செய்தனர்.

பின்னர் ஒரு வாரம் சூரமங்கலம் உதவி கமிஷனர் அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மேலும் மற்ற 3 பேரும் தலைமறைவாக உள்ளனர்.

இதற்கிடையே பெரியார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ள துணைவேந்தர் அலுவலகம், அவரது வீடு, பயணியர் மாளிகை, பதிவாளர் அலுவலகம் உள்பட 7 இடங்களில் 22 மணி நேரம் சோதனை நடந்தது.

இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்டது. மேலும் துணைவேந்தருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 7 பேரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.

அதன்படி பெரியார் பல்கலைக்கழக பொருளாதாரத்துறை தலைவர் பேராசிரியர் ஜெயராமன், மேலாண்மை கல்வி நிறுவன பேராசிரியர் சுப்பிரமணிய பாரதி, விலங்கியல் துறை உதவி பேராசிரியர் நரேஷ் குமார், உளவியல் துறை உதவி பேராசிரியர் ஜெயக்குமார் மற்றும் விருந்தினர் மாளிகை ஊழியர் நந்தீஸ்வரன் ஆகிய 5 பேருக்கு சம்மன் அனுப்பினர். இதையடுத்து இவர்கள் 5 பேரும் இன்று கருப்பூர் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார்கள். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News