தமிழ்நாடு

சிறுமி ஜனனி

மாயமான 4 வயது சிறுமியை மீட்க விரைந்து செயல்பட்ட உசிலம்பட்டி போலீஸ்

Update: 2022-08-10 10:00 GMT
  • போலீசாரின் தீவிர விசாரணையில் குழந்தையை அழைத்து சென்றது சில்லாம்பட்டியை சேர்ந்த குமார்-மகேஷ்வரி தம்பதி என தெரிய வந்தது.
  • வீட்டுக்கு அழைத்து சென்ற ஜனனிக்கு அவர்கள் சாப்பாடு கொடுத்து பின்னர் பாட்டியிடம் ஒப்படைக்க இருந்தனர்.

உசிலம்பட்டி:

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள ஏ.ராமநாதபுரத்தை சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவர் அதே பகுதியில் கோழிக்கறி கடை மற்றும் பேக்கரி நடத்தி வருகிறார். இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு 4 வயதில் ஜனனி என்ற பெண் குழந்தை உள்ளது. இவள் வீட்டின் அருகே உள்ள மழலையர் பள்ளியில் படித்து வருகிறாள்.

நேற்று விடுமுறை தினம் என்பதால் தீனாவிலக்கில் உள்ள பாட்டி வீரம்மாள் வீட்டுக்கு ஜனனியை பெற்றோர் அழைத்து சென்றனர். அதன் அருகிலேயே பார்த்தசாரதிக்கு சொந்தமான கோழிக்கறி கடை உள்ளது. பிற்பகல் மோட்டார்சைக்கிளில் அங்கு வந்து ஒரு தம்பதியினர் கறி வாங்கினர். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஜனனியிடம் அவர்கள் பேச்சு கொடுத்து எங்கள் வீட்டுக்கு வருகிறாயா? என அழைத்துள்ளனர். சிறுமியும் வருவதாக தலையசைத்துள்ளார்.

இதனையடுத்து ஜனனியை அந்த தம்பதி மோட்டார்சைக்கிளில் அழைத்து சென்றனர். இதை அறியாத பெற்றோர் மகள் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அப்போது அங்கிருந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் அழைத்து சென்றதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பார்த்தசாரதி, தனது மகள் கடத்தப்பட்டிருக்கலாம் என நினைத்து உடனடியாக உசிலம்பட்டி நகர் போலீசில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து போலீசார் குழந்தையை மீட்க உடனடி நடவடிக்கை எடுத்தனர். டி.எஸ்.பி. நல்லு தலைமையிலான போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். மேலும் மதுரை-உசிலம்பட்டி-தேனி ரோட்டில் உள்ள சோதனைச்சாவடிகள் உஷார்படுத்தப்பட்டது.

குழந்தை கடத்தல் சம்பவம் நடந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். புகார் கொடுத்த சில மணி நேரத்தில் உசிலம்பட்டி போலீஸ் நிலையமே பரபரப்பானது. குழந்தையை மீட்க போலீசார் அனைத்து பகுதிகளுக்கும் ரோந்து சென்றனர்.

போலீசாரின் தீவிர விசாரணையில் குழந்தையை அழைத்து சென்றது சில்லாம்பட்டியை சேர்ந்த குமார்-மகேஷ்வரி தம்பதி என தெரிய வந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் குழந்தையை மீட்டு தம்பதியை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

அங்கு அவரிடம் விசாரணை நடத்தியதில் குழந்தையின் பாட்டி வீரம்மாளும் குழந்தையை அழைத்து சென்ற தம்பதியும் நன்கு பழக்கமானவர்கள். நேற்று கறிக்கடைக்கு வந்த மகேஷ்வரி வீரம்மாளின் பேத்தியை பார்த்ததும் ஆசையுடன் கொஞ்சியுள்ளார். அப்போது வீட்டுக்கு வருகிறாயா என கேட்க, குழந்தையும் அவருடன் சென்றுள்ளது.

ஆனால் இந்த தகவலை குமார்-மகேஷ்வரி தம்பதியினர் பாட்டி, பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை. இதனால்தான் குழந்தை கடத்தப்பட்டதாக நினைத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

வீட்டுக்கு அழைத்து சென்ற ஜனனிக்கு அவர்கள் சாப்பாடு கொடுத்து பின்னர் பாட்டியிடம் ஒப்படைக்க இருந்தனர். அதற்குள் காலதாமதமானதால் இந்த விவகாரம் போலீஸ் வரை சென்று உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேற்கண்ட தகவல்கள் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த தம்பதியை எச்சரித்து அனுப்பினர்.

Tags:    

Similar News