தமிழ்நாடு

சென்னை கோடம்பாக்கம் தேர்வு மையத்தில் ஆர்வமுடன் தேர்வு எழுதும் பெண்கள்

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை 2 லட்சம் பேர் எழுதினர்: 444 பதவிகளுக்கு கடும் போட்டி

Update: 2022-06-25 06:50 GMT
  • தமிழ் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே எஸ்.ஐ. ஆக முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
  • சென்னை பெருநகர காவல்துறைக்கு உட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 10 தேர்வு மையங்களில் 7,080 இளைஞர்களும், 1,506 பெண்களும் என 8,586 பேர் தேர்வு எழுதினர்.

சென்னை:

தமிழக காவல்துறையில் காலியாகவுள்ள 444 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் 8-ந் தேதி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வெளியிட்டது.

இந்த தேர்வை எழுத விரும்பிய இளைஞர்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தின் இணையதளத்தில் விண்ணப்பித்தனர்.

இந்த தேர்வின் முதல் கட்டமாக இன்று காலை 10 மணி முதல் 12.30 மணி வரை பொது அறிவுத்தேர்வு நடந்தது. மாலை 3.30 மணி முதல் 5.10 மணி வரை தமிழ் திறனறிதல் தேர்வும் நடைபெற உள்ளது.

26-ந்தேதி காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை காவல்துறையில் இருந்து தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான எழுத்து தேர்வு நடைபெறுகிறது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் நடத்தும் தேர்வில், முதல் முறையாக தமிழ் திறனறிதல் தேர்வு நடைபெற்றது. இதில் முதலில் தமிழ் திறனறிதல் தேர்வு விடைத்தாள் திருத்தப்படும்.

அதில் விண்ணப்பதாரர் 40 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்து, தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே அவரது பொது அறிவு தேர்வுக்கான விடைத்தாள் திருத்த எடுத்து கொள்ளப்படும்.

தமிழில் தேர்ச்சி பெறாதவர்கள் எஸ்.ஐ., தேர்வில் இருந்து நீக்கப்படுவர். இதனால் தமிழ் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே எஸ்.ஐ. ஆக முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இத்தேர்வில் காவல்துறையினருக்கு 20 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. காவல்துறையைச் சேர்ந்த 13,374 பேர் இத்தேர்வை எழுதினர்.

இந்த தேர்வை 1,77,221 இளைஞர்கள்,43,949 இளம்பெண்கள், 43 திருநங்கைகள் என மொத்தம் 2,21,213 பேர் எழுதி உள்ளனர். இதற்காக தமிழகத்தில் உள்ள 38 வருவாய் மாவட்டங்கள் 39 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு 197 பள்ளி, கல்லூரிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

தேர்வுக்கூடங்களில் தேர்வர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படையான வசதிகளையும் தேர்வாணைய அதிகாரிகளுடன் சேர்ந்து அந்தந்த மாவட்ட, மாநகர காவல்துறை அதிகாரிகள் செய்திருந்தனர். முக்கியமான அனைத்து தேர்வு அறைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளன. இதற்காக தேர்வு மையங்களில் தற்காலிகமாக கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டன.

சென்னை பெருநகர காவல்துறைக்கு உட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 10 தேர்வு மையங்களில் 7,080 இளைஞர்களும், 1,506 பெண்களும் என 8,586 பேர் தேர்வு எழுதினர். இதேபோல ஆவடி மாநகர காவல்துறைக்கு உட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 12 தேர்வு மையங்களில் 6,994 இளைஞர்களும், 1,499 இளம்பெண்களும் என மொத்தம் 8,493 பேரும், தாம்பரம் மாநகர காவல்துறைக்கு உட்பட்ட காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டு உள்ள தேர்வு மையத்தில் உள்ள பகுதியில் 7,704 இளைஞர்களும்,1,516 இளம்பெண்களும் என மொத்தம் 8,590 பேரும் தேர்வை எழுதினார்கள். 444 பணியிடங்களுக்கு பட்டதாரிகள், என்ஜினீயரிங் படித்தவர்கள் உட்பட 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் போட்டி போட்டு தேர்வு எழுதி உள்ளனர்.

தேர்வுக்கான ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News