தமிழ்நாடு

தொடர்ந்து உயரும் மஞ்சள் விலை- ஈரோட்டில் ஒரு வாரத்தில் குவிண்டாலுக்கு ரூ.4,399 வரை உயர்ந்தது

Published On 2023-07-22 06:12 GMT   |   Update On 2023-07-22 06:12 GMT
  • கடந்த 14-ந் தேதி நடந்த ஏலத்தில் மஞ்சள் ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரத்து 500-க்கு விற்பனையானது.
  • விராலி மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.14,569-க்கு விற்பனையானது.

ஈரோடு:

தமிழகத்திலேயே ஈரோடு மாவட்டத்தில் தான் அதிகப்படியான மஞ்சள் விளைவிக்கப்படுகிறது. சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மட்டும் விடுமுறை நாட்களைத் தவிர மற்ற நாட்களில் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை கூடம், கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை கூடம் என மாவட்டத்தில் 4 இடங்களில் மஞ்சள் ஏலம் நடந்து வருகிறது.

ஈரோடு மார்க்கெட்டுக்கு தரமான மஞ்சள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதால் தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது.

கடந்த 14-ந் தேதி நடந்த ஏலத்தில் மஞ்சள் ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரத்து 500-க்கு விற்பனையானது. கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு மஞ்சள் குவிண்டால் புதிய உச்சத்தை தொட்டது.

இதற்கு முக்கிய காரணம் இந்த ஆண்டு மகாராஷ்டிர, தெலுங்கானா மாநிலத்தில் இருந்து தரமான மஞ்சள் சந்தைக்கு வராததால் ஈரோடு மஞ்சளுக்கு மவுசு அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா மஞ்சுளோடு ஈரோடு மஞ்சள் தரத்தில் அதிக அளவில் உள்ளதால் கடந்த சில நாட்களாகவே ஈரோடு மஞ்சளுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. இதனால் ஈரோடு மஞ்சளை வெளி மாநில வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி சென்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை கூடத்தில் நடந்த மஞ்சள் நிலத்தில் 2,049 மஞ்சள் மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில் விராலி மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.14,569-க்கு விற்பனையானது.

அதாவது ஒரு வாரத்தில் மட்டும் மஞ்சள் குவிண்டால் ரூ.4,399 வரை உயர்ந்துள்ளது. மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.15 ஆயிரத்தை நெருங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இனி வரும் காலங்களில் விலை மேலும் உயரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News