தமிழ்நாடு

சி.சி.டி.வி. காட்சியில் பதிவான கொள்ளையர்கள்

திருவட்டார் அருகே பெண்ணை தாக்கி நகை பறித்த 3 கொள்ளையர்கள் சிக்கினர்

Update: 2023-03-30 10:38 GMT
  • மூவாற்றுமுகம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் சுனிதாவின் கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை பறித்தனர்.
  • படுகாயம் அடைந்த சுனிதாவை சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

திருவட்டார்:

திருவட்டார் அருகே கொற்றிக்கோட்டம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38), லாரி டிரைவர். இவரது மனைவி சுனிதா (36) இவர்களுக்கு ஒரு மகளும் ஒருமகனும் உள்ளனர். மகள் ஏற்றகோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு மகன் மூன்றாம் வகுப்பு படித்து வந்தனர். தினமும் குழந்தைகளை பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் சுனிதா அழைத்து செல்வது வழக்கம். நேற்று மாலையில் குழந்தைகளை அழைப்பதற்காக சுனிதா மோட்டார் சைக்கிளில் சென்றார்.

மூவாற்றுமுகம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் சுனிதாவின் கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை பறித்தனர். இதையடுத்து சுனிதா அவர்களுடன் போராடினார். உடனே அந்த நபர்கள் சுனிதாவை சரமாரியாக தாக்கினார்கள். இதில் அவர் கீழே தவறி விழுந்தார். இதற்குள் அந்த வாலிபர்கள் நகையுடன் தப்பி ஓடிவிட்டனர்.

படுகாயம் அடைந்த சுனிதாவை சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது பற்றி திருவட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ஜானகி மற்றும் போலீசார் சம்பவத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். சம்பவ இடத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளையர்கள் 3 பேரும் முககவசம் அணிந்து பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளில் தப்பி செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது. கொள்ளையடிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

மேலும் மாவட்டம் முழுவதும் கொள்ளையர்கள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நாகர்கோவில் கோட்டார் பகுதியில் உள்ள நகைக்கடையில் வாலிபர் ஒருவர் நகையை விற்பனை செய்வதற்காக வந்தார். நகை கடைக்காரர் நகை குறித்த விவரங்களை கேட்டறிந்தார். அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார். உடனே இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்து அந்த வாலிபரை பிடித்தனர்.

பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்தியபோது அவர் திருவட்டார் பகுதியில் நடந்த செயின் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின் பெயரில் மேலும் இரண்டு வாலிபர்களையும் போலீசார் பிடித்தனர். பிடிபட்ட மூன்று பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிடிபட்டவர்களில் ஒருவர் சுசீந்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். மற்ற இருவரும் குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மாவட்டத்தில் வேறு சில பகுதிகளிலும் கைவரிசை காட்டி இருப்பது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து அவர்களிடம் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News