புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு
- புழல் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
- ஏரிகளுக்கு வரும் நீர் வரத்தை பொறுத்து உபரிநீர் வெளியேற்றம் அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது.
திருவள்ளூர்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து பலத்த மழை கொட்டி வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கன மழையாக கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.
புழல் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கன அடி. இதில் 2,692 மி.கன அடி தண்ணீர் உள்ளது. மொத்த உயரமான 21 அடியில் நீர் மட்டம் 19 அடியை நெருங்கி உள்ளது. ஏரியில் 18.42 அடிக்கு தண்ணீர் நிரம்பி இருக்கிறது.
தொடர்ந்து மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் புழல் ஏரிக்கு நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து புழல் ஏரியில் இருந்து இன்று மாலை 3 மணிக்கு உபரி நீர் திறக்கப்பட உள்ளது.
இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
புழல் ஏரிக்கு நீர் வரத்து 2 ஆயிரம் கனஅடியாக உள்ளது. இதைத்தொடர்ந்து ஏரியில் இருந்து இன்று மாலை 3மணியளவில் 100 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இதேபோல் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்தும் உபரி நீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மி.கன அடி. இதில் 2,764 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 1180 கன அடி தண்ணீர் வருகிறது. ஏரியின் மொத்த உயரமான 24 அடியில் 20.64 அடிக்கு தண்ணீர் நிரம்பி உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்த தொடர்ந்து அதிகரித்து வருவதால் இன்று மாலை உபரி நீர் திறக்கப்படும் என்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி அறிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள அறிவிப்பில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து ஏரியில் இருந்து இன்று மாலை 3 மணிக்கு 100 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது என்று கூறி உள்ளார்.
புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து இன்று ஒரே நாளில் தண்ணீர் திறக்கப்படுவதால் உபரி நீர் செல்லும் பகுதியில் வசிப்பவர்கள், தாழ்வான இடங்களில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
இந்த 2 ஏரிகளுக்கு வரும் நீர் வரத்தை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளை பார்க்க பொதுமக்கள் வரவேண்டாம் என்றும் என்றும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர். ஏரிகளுக்கு வரும் நீர் வரத்தை பொறுத்து உபரிநீர் வெளியேற்றம் அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது.
சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1,081 மி.கன அடி. இதில் 212 மி.கன அடிக்கு தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 214 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மி.கன அடி. இதில் 818 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 280 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி மொத்த கொள்ளளவான 500 மி.கன அடி முழுவதும் நிரம்பி உள்ளது. ஏரிக்கு வரும் 155 கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.