திருப்பூர் அருகே மூட்டை, மூட்டையாக கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்- பொதுமக்கள் அதிர்ச்சி
- போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூட்டைகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
- மருந்து கழிவுகள் கிடந்த சாக்குப்பைகளில் வேலூரில் உள்ள ஒரு மருத்துவக்கல்லூரியின் பெயர் பதிவிடப்பட்டு இருந்தது.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கரைப்புதூர் முனியப்பன் கோவில் அருகே சில மூட்டைகள் கிடந்தன. அந்த வழியே சென்றவர்கள் அதனைப் பார்த்தபோது, அதற்குள் டாக்டர்கள் பயன்படுத்தும் கையுறை, மற்றும் சில மருந்து அட்டைகள், பனியன் நிறுவனத்தில் பயன்படுத்தப்படும் போம் எனப்படும் பஞ்சு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடந்தன. அந்த இடத்தில் இருந்து சற்று தள்ளி இதே போல சில மூட்டைகள் கிடந்தன.
இதையடுத்து அப்பகுதி மக்கள் பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூட்டைகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது மருந்து கழிவுகள் கிடந்த சாக்குப்பைகளில் வேலூரில் உள்ள ஒரு மருத்துவக்கல்லூரியின் பெயர் பதிவிடப்பட்டு இருந்தது.
இதனால் அந்த கல்லூரியில் இருந்து மருத்துவ கழிவுகள் இங்கு வந்து போடப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்:- கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்லடம் சின்னக்கரை மற்றும் அருள்புரம் பகுதியில் உள்ள மருந்து கடைகளில் சுகாதாரத்துறையினர் சோதனை நடத்தினர். இதில் உரிய அனுமதி இன்றி செயல்பட்ட மருந்து கடைகள் மீது நடவடிக்கை எடுத்தனர். எனவே அங்கிருந்து காலாவதியான மருந்துகளை கொண்டு வந்து போட்டுள்ளனரா? என சந்தேகம் உள்ளது.
மேலும் பனியன் நிறுவனங்களில் பயன்படுத்தும் போம், நூல் கண்டுகள் கிடப்பதால் பனியன் நிறுவனத்தில் இருந்து போட்டுள்ளனரா? எனவும் சந்தேகம் உள்ளது. மருந்து கழிவு சாக்குப்பைகளில் வேலூரில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியின் பெயர் பதிவிடப்பட்டுள்ளது.
எனவே அங்கிருந்து கொண்டு வந்து போடப்பட்டுள்ளதா? எனவும் சந்தேகம் உள்ளது. இது போன்று மருத்துவ கழிவுகளை போடுவதால் சுகாதார சீர்கேடு, நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே இது குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.