தமிழ்நாடு செய்திகள்

திருநாவுக்கரசருக்கும் 'அந்த ஆசை'...

Published On 2023-06-17 12:56 IST   |   Update On 2023-06-17 12:56:00 IST
  • தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி பொறுப்பேற்று சுமார் 4 ஆண்டுகள் ஆகிவிட்டன.
  • தமிழக அரசியலில் 6 முறை எம்.எல்.ஏ.வாக இருந்திருக்கிறேன்.

அரசியலில் இருப்பவர்களுக்கு தலைவராக வேண்டும், எம்.எல்.ஏ., எம்.பி.யாக வேண்டும், வாய்ப்பு கிடைத்தால் முதல்வராக கூட ஆக வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருப்பதுதான். இதில் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் மட்டும் விதிவிலக்கு ஆகிவிடுவாரா என்ன?

தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி பொறுப்பேற்று சுமார் 4 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என்ற பேச்சு ஒருபக்கம் அடிபடுகிறது. இன்னொரு பக்கம் பாராளுமன்ற தேர்தல் முடியும் வரை புதிய தலைவருக்கு வாய்ப்பு இல்லை என்ற பேச்சும் அடிபடுகிறது.

இது பற்றி திருநாவுக்கரசர் கூறும்போது, "அழகிரி பொறுப்பேற்று 4 ஆண்டுகள் ஆகி விட்டன. எனவே அவர் மாற்றப்படலாம். அல்லது அவரே தலைவராகவும் தொடரலாம். எதுவாக இருந்தாலும் டெல்லி தலைமைதான் முடிவு செய்யும். அதே நேரம் இங்குள்ள முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் தலா 2 முறை மாநில தலைவராக இருந்துள்ளார்கள்.

நான் ஒருமுறைதான் இருந்திருக்கிறேன். எனவே எனக்கு மீண்டும் கட்சி தலைவர் பதவி கொடுத்தால் உண்மையாக பணியாற்ற தயாராக இருக்கிறேன். தமிழக அரசியலில் 6 முறை எம்.எல்.ஏ.வாக இருந்திருக்கிறேன். துணை சபாநாயகராக பொறுப்பு வகித்துள்ளேன். அமைச்சராக 10 வருடம் பணியாற்றிய அனுபவமும் இருக்கிறது. நான் 30 வயதில் இருக்கும் போதே எனது துறையின் கீழ் 30 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் பணியாற்றினார்கள். மத்திய மந்திரியாகவும் இருந்திருக்கிறேன். 50 வருட அரசியல் அனுபவம் இருந்திருக்கிறது. எனவே முதல்வர் ஆகும் தகுதி கூட எனக்கு உண்டு என்பதை நான் நம்புகிறேன். ஆனால் காங்கிரசில் இருந்து கொண்டு அப்படி ஒரு கனவு காண முடியாது என்கிற யதார்த்தமும் தனக்கு தெரியும்" என்றார் ஆதங்கத்துடன்.

Tags:    

Similar News