தமிழ்நாடு

உண்ணாவிரதத்தில் 4 பேர் மயக்கம் அடைந்ததால் ஒப்பந்த நர்சுகள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

Published On 2023-01-06 05:57 GMT   |   Update On 2023-01-06 05:57 GMT
  • நர்சுகள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.
  • அரசு எங்களுக்கு பணியை தொடருவதற்கான அரசாணையை தரும்வரை எங்களது போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்.

சென்னை:

தமிழகத்தில் கொரோனா தொற்று காலத்தின் போது அரசு ஆஸ்பத்திரிகளில் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 2,500 தற்காலிக நர்சுகள் பணியமர்த்தப்பட்டனர்.

அவர்களின் பணிக்காலம் கடந்த டிசம்பர் 31-ந்தேதியுடன் நிறைவடைந்தது. அவர்களுக்கு இனிமேல் பணி நீட்டிப்பு வழங்கப்படாது என்று அரசு அறிவித்தது.

இதையடுத்து நர்சுகளுக்கு தங்களுக்கு நிரந்தர பணி வழங்க கோரி போராட்டத்தில் குதித்தனர். எம்.ஆர்.வி. நர்சுகள் மேம்பாட்டு சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகில் நர்சுகள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்கள். நேற்று 5-வது நாளாக அவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

இதில் 500-க்கும் மேற்பட்ட நர்சுகள் கலந்து கொண்டனர். சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்க தலைவர் ரவீந்திரநாத், டாக்டர் சாந்தி ஆகியோர் தலைமையில் இந்த போராட்டம் நடந்தது.

முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக பா.ஜனதா துணைத் தலைவர் நாகராஜன் ஆகியோர் போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு சென்று நர்சுகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 4 நர்சுகள் மயக்கம் அடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து நர்சுகள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.

இதுகுறித்து எம்.ஆர்.பி. நர்சுகள் மேம்பாட்டு சங்கத்தைச் சேர்ந்த அமலடைகோ கூறியதாவது:-

நர்சுகளின் இந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுகிறது. ஆனாலும் இந்த போராட்டத்தை அடுத்தக்கட்டமாக தொடர் போராட்டமாக நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். எங்கள் போராட்டம் தொடரும். அரசு எங்களுக்கு பணியை தொடருவதற்கான அரசாணையை தரும்வரை எங்களது போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News