தமிழ்நாடு

மின் கட்டணம் செலுத்துவதற்காக வாடகைதாரர்கள் ஆதாரை இணைப்பதால் வீட்டு உரிமையாளர்கள் கடும் அச்சம்

Published On 2022-11-28 07:15 GMT   |   Update On 2022-11-28 07:15 GMT
  • சென்னையில் 180-க்கும் மேற்பட்ட பிரிவு அலுவலகங்களில் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண் இணைக்கப்படுகிறது.
  • இந்தியாவில் உள்ள தங்களின் ஆதார் அட்டை மூலம் ஆன்லைனில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கலாம்.

சென்னை:

தமிழகத்தில் வீடுகள், கைத்தறி, விசைத்தறி, குடிசைகள் மற்றும் விவசாய மின் இணைப்பு தாரர்கள் மின் கட்டணம் செலுத்துவதற்காக மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும் பணியானது கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.

இதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இலவச மின்சாரம் மற்றும் மானிய விலை மின்சாரம் வழங்கப்படும் 2.34 கோடி வீடுகள், 22.87 லட்சம் விவசாய பம்பு செட்டுகள், 9.75 லட்சம் குடிசை வீடுகள் மற்றும் 1.65 லட்சம் விசைத் தறி ஆகிய நுகர்வோர்களின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த 15-ந்தேதி தொடங்கியது.

ஆனாலும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்காத மின் நுகர்வோர் மின் கட்டணம் செலுத்தும்போது ஏற்படும் சிரமங்களை தவிர்ப்பதற்காக சிறப்பு முகாம்கள் இன்று முதல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான முகாம் தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியது. வருகிற டிசம்பர் 31-ந்தேதி வரை இந்த முகாம் நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் 2811 பிரிவு அலுவலகங்களில் இந்த முகாம் நடக்கிறது. இந்த ஒவ்வொரு பிரிவு அலுலகத்திலும் தலா ஒரு கவுண்டர் திறக்கப்பட்டுள்ளது. அங்கிருக்கும் ஊழியர் பொதுமக்களுக்கு மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்து கொடுக்கிறார்.

இதற்காக பொது மக்கள் தங்களின் ஆதார் அட்டை, மின்கட்டண அட்டை, செல்போன் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை பதிவு செய்து செல்போன் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி.யை பதிவு செய்தால் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு விடும். இதை உறுதி செய்யும் வகையில் வாடிக்கையாளர்களின் செல் போனுக்கு குறுஞ்செய்தியும் வரும்.

வீட்டு உரிமையாளர்கள், வாடகைக்கு குடியிருப்பவர்கள் இவர்களில் யார் வேண்டுமானாலும் ஒருவர் ஆதார் எண்ணை இணைக்க முடியும். வாடகைக்கு குடியிருப்பவர்கள் மின் கட்டண அட்டையுடன் தங்களின் ஆதார் அட்டை, செல்போன் ஆகியவற்றை எடுத்துச் சென்று இணைக்க வேண்டும்.

சென்னையில் 180-க்கும் மேற்பட்ட பிரிவு அலுவலகங்களில் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண் இணைக்கப்படுகிறது.

இந்த நிலையில் வாடகைக்கு குடியிருப்பவர்கள் மின் இணைப்புடன் தங்களின் ஆதார் எண்ணை இணைத்த பிறகு வீடு மாறி செல்லும் நிலையில் ஏதாவது பிரச்சினை ஏற்படுமோ என்ற குழப்பம் வாடகை தாரர்கள் மத்தியில் உருவாகி உள்ளது.

அதற்கு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இது தொடர்பாக மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

வீடுகளில் வாடகைக்கு குடியிருப்பவர்கள் மின் கட்டணம் செலுத்துவதற்காக மின் இணைப்பு எண்ணுடன் தங்களின் ஆதார் எண்ணை பதிவு செய்து கொள்ளலாம்.

பின்னர் வீடு மாறி வேறு வீட்டுக்கு குடியேறும் போது அந்த வீட்டின் மின் இணைப்பு எண்ணுடன் தங்களின் ஆதார் எண்ணை மீண்டும் பதிவு செய்ய முடியும்.

இதேபோல் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்கள் வீட்டு மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.

அவர்கள் இந்தியாவில் உள்ள தங்களின் ஆதார் அட்டை மூலம் ஆன்லைனில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கலாம். அல்லது அந்த வீட்டில் வசிப்பவர்கள் அல்லது உறவினர்களின் ஆதார் எண்ணை இணைத்து மின் கட்டணம் செலுத்த முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே மின் கட்டணம் செலுத்துவதற்காக வாடகைக்கு குடியிருப்பவர்கள் ஆதார் எண்ணை இணைப்பதால் வீட்டு உரிமையாளர்கள் கடும் அச்சத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

மின் இணைப்பு எண்ணுடன் வாடகைதாரர்கள் தங்களின் ஆதார் எண்ணை இணைக்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் சொத்து தொடர்பான பிரச்சினை ஏற்படுமோ? வாடகைதாரர்கள் அந்த சொத்துக்கு உரிமை கொண்டாடினால் எதிர்காலத்தில் ஏதாவது சட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

இதனால் வாடகை தாரர்கள் ஆதாரை இணைப்பதற்கு பெரும்பாலான வீட்டு உரிமையாளர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். வாடகைதாரர்களின் ஆதார் இணைப்பு மூலம் வீட்டு உரிமையாளர்கள் தங்களின் உரிமைகளை எப்படி பாதுகாக்க போகிறார்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் அதிகாரிகளிடையே மீண்டும் குழப்பம் நீடித்து வருகிறது. மேலும் இதுதொடர்பாக பல்வேறு சந்தேகங்களும் பொது மக்களுக்கு உள்ளன.

ஆனால் அந்த சந்தேகங்களை யாரிடம் கேட்டு நிவர்த்தி செய்வது என்று அவர்களுக்கு தெரிய வில்லை. முகாம்களில் உள்ள ஊழியர்களிடம் கேட்டால் அவர்களுக்கும் சரியாக பதில் சொல்ல தெரிய வில்லை.

இதற்கிடையே பொது மக்களின் கேள்விக்கு இணையதளத்தில் பதில் அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதில் பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் கேள்விகளை கேட்டு பதில் பெற முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Similar News