வேலூரில் ஜெயில் வளாகத்தில் போலீஸ்காரரை தாக்கி கைதி தப்பி ஓட முயற்சி
- வேலூர் ஆயுதப்படை போலீஸ்காரர் பென்னாத்தூரை சேர்ந்த சுரேஷ் (30) உள்பட 4 பேர் பாதுகாப்பாக அழைத்துச் சென்று வேனில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
- வேலூர் ஜெயில் வளாகத்திற்கு வந்ததும் மாதேசை வேனிலிருந்து போலீசார் கீழே இறக்கினர்.
வேலூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை சேர்ந்தவர் மாதப்பன் என்கிற மாதேஷ் (வயது25). திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட இவர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கு விசாரணைக்காக மாதேசை நேற்று தேன்கனிக்கோட்டை கோர்ட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
அவரை வேலூர் ஆயுதப்படை போலீஸ்காரர் பென்னாத்தூரை சேர்ந்த சுரேஷ் (30) உள்பட 4 பேர் பாதுகாப்பாக அழைத்துச் சென்று வேனில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
மாதேசுக்கு அவரது குடும்பத்தினர் வக்கீல் எதுவும் வைக்கவில்லை.மேலும் கோர்ட்டில் வந்து அவரை மனைவி மற்றும் உறவினர்கள் யாரும் பார்க்க வரவில்லை. அதனால் மாதேஷ் மனமுடைந்து நிலையில் காணப்பட்டார்.
ஆயுதப்படை போலீஸ்காரர்களிடம் எனது குடும்பத்தினரிடம் பேச வேண்டும். செல்போன் தாருங்கள் என கேட்டுள்ளார்.
போலீசார் செல்போன் தர மறுத்ததால் அவர் ஆத்திரமடைந்தார்.
மாலையில் வேலூர் ஜெயில் வளாகத்திற்கு வந்ததும் மாதேசை வேனிலிருந்து போலீசார் கீழே இறக்கினர். அப்போது அவர் சிறுநீர் கழிக்க வேண்டும் என தெரிவித்தார். உடனடியாக போலீஸ்காரர் சுரேஷ் மாதேஷை ஜெயில் வளாகத்தில் உள்ள ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்துச் சென்றார்.
மாதேஷின் கை விலங்கை கழட்டிவிட்டு சிறுநீர் கழிக்க அனுமதித்தார். ஒதுக்குப்புறமான இடத்தில் ஒரே ஒரு போலீஸ்காரர் மட்டுமே இருந்ததை கண்ட மாதேஷ் அவரை தாக்கி விட்டு தப்பி செல்ல முடிவு செய்தார்.
சிறுநீர் கழிக்கும் இடத்தில் இரும்பு கம்பி ஒன்று கிடந்தது. அதனை எடுத்து போலீஸ்காரர் சுரேஷின் வயிறு தோள்பட்டை கை போன்றவற்றில் வேகமாக தாக்கினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸ்காரர் சுரேஷ் கைதி தப்பி செல்ல முயல்வதாக கூச்சலிட்டார். சத்தம் கேட்டு மற்ற போலீஸ்காரர்கள் சென்று தப்பி ஓட முயன்ற மாதேஷை மடக்கி பிடித்தனர்.
படுகாயம் அடைந்த போலீஸ்காரர் சுரேசை வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மாதேஷ் உடனடியாக வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
போலீஸ்காரரை தாக்கியதாக மாதேஷ் மீது பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஜெயில் வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.