தமிழ்நாடு

அரசு பஸ்சில் விற்கப்பட்ட பயணச்சீட்டை மீண்டும் பயணிகளுக்கு மறுவிற்பனை செய்த பஸ் கண்டக்டர் சஸ்பெண்டு

Published On 2023-11-17 06:51 GMT   |   Update On 2023-11-17 08:11 GMT
  • பஸ்சில் இருந்த பயணிகளை கீழே இறக்கி மாற்று பஸ்சில் சிதம்பரத்திற்கு அனுப்பி வைத்தனர்.
  • பஸ் கண்டக்டரை டெப்போவிற்கு அழைத்து சென்று அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடலூர்:

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் மெய்யனூர் கிளையில் டிரைவராக சத்யமூர்த்தி, கண்டக்டராக எஸ்.நேரு ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். நேற்று இவர்களுக்கு சேலம்-சிதம்பரம் வழித்தடத்தில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பஸ் காலை 5.55 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்டது. பஸ் நெய்வேலிக்கு 4 கிலோ மீட்டருக்கு முன்பு ஊமங்கலம் என்ற பகுதியில் சென்றபோது விழுப்புரம் போக்குவரத்து கழக கடலூர் மண்டல உதவி மேலாளர் தலைமையிலான டிக்கெட் பரிசோதகர்கள் குழு பஸ்சை நிறுத்தி சோதனை நடத்தினர்.

அப்போது தலைவாசல் பஸ் நிலையத்தில் ஏறிய பயணிகளுக்கு வழங்கப்பட்ட 2 நூறு மற்றும் 2 ரூ.10 மதிப்புள்ள பயணச் சீட்டுகள் நேற்றைய தேதியில் வழங்கிய பயணப்பட்டியலில் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட ஆய்வில் அந்த பயணச்சீட்டுகள் இதே கண்டக்டரால் ஏற்கனவே இவருடைய முந்தைய பணியில் பயணிகளுக்கு விற்கப்பட்டவை என தெரிந்தது.

கண்டக்டர் நேரு ஏற்கனவே அவரால் விற்கப்பட்ட பயணச் சீட்டை வைத்திருந்து மீண்டும் பயணிகளுக்கு மறுவிற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கண்டக்டர் நேரு பணி தொடராமல் பணிநிறுத்தம் செய்யப்பட்டார். மேலும் கண்டக்டர் நேருவை சேலம் அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து மாற்று கண்டக்டர் ஏற்பாடு செய்யப்பட்டு பேருந்து இயக்கப்பட்டது. இதுபோன்ற சம்பவங்களை முற்றிலும் கட்டுப்படுத்தும் நோக்கில் மாதந்தோறும் பயணச்சீட்டு பரிசோதகர்கள் மற்றும் அலுவலர்களால் கண்டக்டர்களின் பணப்பை மற்றும் லாக்கர்கள் திடீர் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவது சேலம் போக்குவரத்துக் கழகத்தில் வழக்கமாக நடைமுறையில் உள்ளது.

Tags:    

Similar News