சென்னை மாவட்டத்தில் 3723 வாக்குச்சாவடிகளில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்- இன்றும், நாளையும் நடக்கிறது
- சென்னை மாவட்டத்தில் உள்ள 3723 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெறுகின்றன.
- வாக்காளர் அட்டையில் உள்ள திருத்தங்கள், முகவரி மாற்றம் போன்றவற்றையும் இம்முகாம்கள் மூலம் செய்து சரி செய்து கொள்ளலாம்.
சென்னை:
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.
மொத்த வாக்காளர்கள் 38 லட்சத்து 92 ஆயிரத்து 457 பேர் உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து அனைத்து மண்டல அலுவலகங்கள், வாக்குசாவடி மையங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்கள் பெயரினை சேர்க்க சிறப்பு முகாம் இன்றும், நாளையும் (சனி, ஞாயிறு) நடைபெறுகிறது.
புதிதாக பெயரை சேர்க்க படிவம் எண்.6, பெயரை நீக்கம் செய்ய படிவம் 7, சட்டமன்ற தொகுதிக்குள்ளேயே இடமாற்றம் செய்யவும் வேறு தொகுதிக்கு மாறியவர்கள் திருத்தம் செய்யவும் படிவம் எண்.8-ஐ பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும்.
அதற்கான ஆவண நகலை இணைத்து வாக்குச்சாவடி மையங்களில் உள்ள அலுவலர்களிடம் வழங்க வேண்டும்.
சென்னை மாவட்டத்தில் உள்ள 3723 வாக்குச்சாவடிகளில் இந்த சிறப்பு முகாம் நடைபெறுகின்றன. வாக்காளர் அட்டையில் உள்ள திருத்தங்கள், முகவரி மாற்றம் போன்றவற்றையும் இம்முகாம்கள் மூலம் செய்து சரி செய்து கொள்ளலாம்.
இதனையடுத்து 26 மற்றும் 27ந்தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. மேலும் பொதுமக்கள் www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும் தங்களுடைய பெயர்களை சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.