ஓட்டு போடாதவர்கள் வெட்கப்படும் அளவுக்கு நன்மை செய்வோம்- அமைச்சர் துரைமுருகன் பேச்சு
- நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை அனைத்தும் மீண்டும் வழங்கப்படும்.
- எனது தொகுதியில் கடந்த முறை நான் 38 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கி உள்ளேன்.
வேலூர்:
காட்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முகுந்தராயபுரத்தில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
பிரசாரத்தின் போது கூட்டம் ஜெஜெ என்று வருவார்கள். அவர்கள் ஓட்டு போடவில்லை என்றால் அதற்கு கவலைப்பட கூடாது.ஓட்டு போடுவது அவர்களது உரிமை. அவர்களுக்கு நல்லது செய்வது நமது கடமை.
யாராவது நமக்கு தீமை செய்தால் அந்த நபர் வெட்கப்படும் அளவுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று திருவள்ளுவர் கூறியிருக்கிறார். நீங்கள் வெட்கப்படும் அளவுக்கு நாங்கள் தொண்டு செய்வோம்.
தொகுதி மக்களுக்கு தாயுள்ளத்துடன் பணியாற்றுகிறேன். அரசு பள்ளியில் படித்து விட்டு கல்லூரிக்கு செல்லும் பெண்களுக்கு மாதந்தோறும் முதல் அமைச்சர் ரூ.ஆயிரம் கொடுக்கிறார்.
பள்ளிக்கூடத்துக்கு போகும் குழந்தைகளுக்கு காலை உணவு, மதிய உணவு வழங்குகிறார். இரவு சாப்பாடு மட்டும்தான் பெற்றோர் போடணும். அந்த அளவுக்கு மு.க.ஸ்டாலின் ஆட்சி செய்கிறார்.
நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை அனைத்தும் மீண்டும் வழங்கப்படும். எனது தொகுதியில் கடந்த முறை நான் 38 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கி உள்ளேன்.
இந்த முறை நான் அமைச்சர் நான்தான் முடிவு எடுப்பேன். உங்கள் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்படும். நிவர்த்தி செய்யப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.