90 அடியை நெருங்கும் மேட்டூர் அணை நீர்மட்டம்
- அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
- காவிரி ஆறு ஓடும் கரையோர மாவட்டங்களில் ஆடி 18-ந் தேதி அன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுவது வழக்கம்.
சேலம்:
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கிருஷ்ண ராஜசாகர், கபினி ஆகிய 2 அணைகளும் தனது முழு கொள்ளளவை எட்டியது. அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. அணைகளுக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து உபரி நீர் அதிகரித்தும், குறைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கிருஷ்ண ராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 124.80 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 42 ஆயிரத்து 45 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரத்து 914 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அதே போல் கபினி அணையும் தனது முழு கொள்ளளவை எட்டியது. அணைக்கு இன்று வினாடிக்கு 15 ஆயிரத்து 965 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 16 ஆயிரத்து 792 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிருஷ்ண ராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு 57 ஆயிரத்து 706 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டு இருக்கிறது. கடந்த சில நாட்களாக அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடிக்கும் மேல் இருந்தது. பின்னர் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் நீர்வரத்து குறைந்து உபரி நீரும் குறைக்கப்பட்டது. இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 33 ஆயிரத்து 849 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 33 ஆயிரத்து 40 கனஅடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் 89.31 அடியாக உயர்ந்து காணப்பட்டது. இன்று மாலைக்குள் அணையின் நீர்மட்டம் 90 அடியை தொட்டுவிடும்.
இதற்கிடையே இன்று காலை முதல் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு மீண்டும் அதிகரித்து காணப்படுவதால் அந்த தண்ணீர் இன்று மாலை முதல் தமிழகத்துக்கு வரத்தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த தண்ணீர் வந்தால்மேட்டூர் அணை நாளை மறுநாள் மாலைக்குள் 100 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 51.86 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
காவிரி ஆறு ஓடும் கரையோர மாவட்டங்களில் ஆடி 18-ந் தேதி அன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுவது வழக்கம். அப்போது காவிரியில் ஓடும் புது வெள்ளத்தில் பொதுமக்கள் மற்றும் புதுமண தம்பதிகள் புனித நீராடுவார்கள். மேலும் ஆடி பட்டம், தேடி பார்த்து விதைக்கனும் என்ற பழமொழிக்கு ஏற்ப விவசாயிகள் காவிரியில் புனித நீராடி விட்டு விவசாய பணிகளை தொடங்குவார்கள். எனவே அணை வேகமாக நிரம்பி வருவதால் வருகிற 3-ந்தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடும் வகையில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.