மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,341 கன அடியாக அதிகரிப்பு
- மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
- நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 2,832 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 2,149 கன அடியாக குறைந்தது.
மேட்டூர்:
கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் அங்குள்ள கிருஷ்ண ராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது.
கிருஷ்ண ராஜசாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 124.80 அடியாகும். இன்று அணைக்கு வினாடிக்கு 6,600 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் நீர்மட்டம் 103.40 அடி உயர்ந்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 574 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அதுபோல் கபினி அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 84 அடியாகும். இன்று அணையின் நீர்மட்டம் 82.45 அடியாக உயர்ந்து காணப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 6,148 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இந்த அணையில் இருந்து விநாடிக்கு 2,000 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த 2 அணைகளில் இருந்தும் திறந்துவிடப்பட்ட தண்ணீர் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
இன்று காலை நிலவரப்படி கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டு பகுதிக்கு நீர்வரத்து 5000 ஆயிரம் கன அடியில் இருந்து 5,500 கன அடியாக அதிகரித்துள்ளது. இங்கு நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 5,500 கன அடியாக நீடிக்கிறது. இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இந்த தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு அணைக்கு வருகிறது. நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 2,832 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 2,149 கன அடியாக குறைந்தது. இந்த நிலையில் இன்று நீர்வரத்து அதிகரித்து விநாடிக்கு 3,341 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை விட நீர்வரத்து அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 40.59 அடியாக உயர்ந்தது. அணையில் 12.39 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.