கோட்டைமேடு பகுதியில் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் உள்ள பழமையான மரம் சாய்ந்து விழுந்து கிடக்கும் காட்சி.
ராமநாதபுரம் மாவட்டத்தில் விடிய, விடிய கொட்டித்தீர்த்தது: தொண்டியில் 100.6 மி.மீ. மழை பதிவு
- கமுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழையில் மரங்கள் சாய்ந்து, பள்ளி வளாகங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.
- கோட்டைமேட்டில் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் இருந்த பழமையான மரம் சாய்ந்து விழுந்து மருத்துவமனையின் சுற்றுச்சுவர் சேதமடைந்தது.
பசும்பொன்:
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
குறிப்பாக கடலோர பகுதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையடி வாரம் உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அனைத்து வகையான நீர் நிலைகளுக்கும் தண்ணீர் வரத்தொடங்கி இருக்கிறது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கியுள்ளதால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே வானிலை ஆய்வு மையத்தின் தகவல் படி ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பெய்த வரலாறு காணாத மழையால் வறண்டு கிடந்த பூமி செழித்துள்ளது.
தமிழகத்தில் இன்று காலை 8 மணி வரையிலான நிலவரப்படி அதிகபட்சமாக தொண்டியில் 10.6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. அதேபோல் ராமநாதபுரத்தில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் இன்றும் காலை முதல் வானம் மேகமூட்டத்துடனேயே காணப்படுகிறது.
கமுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழையில் மரங்கள் சாய்ந்து, பள்ளி வளாகங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. குறிப்பாக கமுதி, கிளாமரம், கீழராமநதி, கே.எம்.கோட்டை, மூலைக்கரைப்பட்டி, வடுகபட்டி, பெருமாள்தேவன்பட்டி, மண்டல மாணிக்கம், ராமசாமிபட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் 10 சென்டி மீட்டருக்கும் மேல் மழை பதிவாகியுள்ளது.
இந்த தொடர் மழையின் காரணமாக கமுதி பெரிய கண்மாய், மண்டலமாணிக்கம் கண்மாய், வடுகபட்டி, நீராவி, பெரிய உடப்பங்குளம் உட்பட பல்வேறு கிராமங்களில் கண்மாய்கள் நிரம்பின. இதனால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கோட்டைமேட்டில் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் இருந்த பழமையான மரம் சாய்ந்து விழுந்து மருத்துவமனையின் சுற்றுச்சுவர் சேதமடைந்தது.
இதனை அடுத்து 10-க்கும் மேற்பட்ட கமுதி தீயணைப்புதுறை வீரர்கள் எந்திரங்கள் மூலம் சாய்ந்த மரத்தை அகற்றினர். அதே போல் அபிராமம் அடுத்துள்ள டி.வல்லக்குளம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி வளாகத்தைச் சுற்றிலும் மழை நீர் சூழ்ந்தது. இதனால் நேற்று பள்ளிக்கு மழையில் நனைந்தபடி மாணவர்கள் பள்ளிக்குள் சென்றனர்.
மேலும் பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழை நீரில் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ பூச்சிகள் வகுப்பறைக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் போதிய மழை பெய்யாததால் சம்பா சாகுடிபடியை விவசாயிகள் முழுமையாக மேற்கொள்ள முடியவில்லை. அத்துடன் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பும் தாமதம் ஆனதால் குறுகிய கால பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
தற்போது பெய்து வரும் கனமழை மற்றும் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு உள்ளிட்ட காரணங்களால் மீண்டும் சம்பா சாகுபடியை தொடங்க விவசாயிகள் மகிழ்ச்சியுடன் அயத்தமாகி வருகிறார்கள்.