தமிழ்நாடு செய்திகள்

சிவகாசி பத்திரகாளியம்மன் கோவில் ராஜகோபுரத்தில் தீ கொளுந்துவிட்டு எரிந்த காட்சி.


கோவில் ராஜகோபுரத்தில் தீ விபத்து: பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்குப்பதிவு

Published On 2022-11-21 10:44 IST   |   Update On 2022-11-21 10:44:00 IST
  • சிவகாசி பராசக்தி காலனியில் பிரசித்தி பெற்ற பத்திர காளியம்மன் கோவில் உள்ளது.
  • கோபுரத்தை சுற்றி தீ கொளுந்து விட்டு எரிந்ததால் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

சிவகாசி:

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பராசக்தி காலனியில் பிரசித்தி பெற்ற பத்திர காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. தற்போது கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று கோவில் வழியாக திருமண நிகழ்ச்சிக்காக சீர்வரிசைகள் கொண்டு சென்றனர். அப்போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இதில் ஏற்பட்ட தீப்பொறி ராஜகோபுரத்தின் மீது போர்த்தப்பட்டிருந்த பிளாஸ்டிக் தார்பாயில் விழுந்து தீ பிடித்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென்று பரவியது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சிவகாசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர்கள் விவேகானந்தன், அழகுச்சாமி ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

கோபுரத்தை சுற்றி தீ கொளுந்து விட்டு எரிந்ததால் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்து குறித்து கோவில் நிர்வாகிகள் சிவகாசி டவுன் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுபா குமார், பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

தீ விபத்து நடந்ததை தொடர்ந்து பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய நேற்று இரவு அனுமதிக்கப்படவில்லை. மேலும் பொதுமக்கள் 3 கிலோ மீட்டர் தூரம் வரை செல்ல அனுமதிக்கப்படவில்லை.

தீ அணைக்கப்பட்டு சகஜ நிலை திரும்பிய பின்னர் இன்று காலை 8 மணி முதல் பக்தர்கள் கோவிலில் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

Similar News