தமிழ்நாடு

புயல் தாக்கத்தையும் மிஞ்சிய குடும்ப பிரச்சனை: வெள்ளத்தில் படகில் சென்று குழந்தையை மீட்டுவர பாசப் போராட்டம் நடத்திய தந்தை

Published On 2023-12-09 10:14 GMT   |   Update On 2023-12-09 10:14 GMT
  • படகில் நின்றபடியே சண்டை போட்டதால் படகை ஓட்டி சென்றவர் பரிதாபமாக தவித்தார்.
  • பெண் வீட்டார், கணவர் குடும்பத்தினரை அடிக்க பாய்ந்தனர்.

சென்னை:

'மிச்சாங்' புயல் மற்றும் பலத்த மழை காரணமாக சென்னையில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. பள்ளிக்கரணை சாய் பாலாஜி நகர் முழுவதும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.

இந்த நிலையில் இங்கு வசிக்கும் ஒரு பெண்ணுக்கு கடந்த 3 வாரங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. இந்த பெண்ணின் கணவர் குடும்பத்தினர் வேளச்சேரி பகுதியில் வசித்து வருகிறார்கள். அந்த பகுதியில் மழை வெள்ளம் தேங்கவில்லை.

எனவே மனைவியை குழந்தையுடன் வெள்ளத்தில் இருந்து பத்திரமாக அழைத்து வர கணவர் விரும்பினார். இதை தனது தாயாரிடம் தெரிவித்தார். இதையடுத்து அந்த வாலிபர், அவரது தாயார், சகோதரி ஆகியோர் அரசு தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட படகில் சென்றனர். அந்த பெண்ணின் வீட்டை அடைந்ததும், மாமியார் படகில் இருந்தபடியே மருமகளை அழைத்தார்.

உடனே வீட்டை விட்டு வெளியே வந்த மருமகள், மாமியாரை வீட்டுக்குள் வருமாறு கூறினார். ஆனால் மாமியாரோ வீட்டுக்குள் செல்லவில்லை. படகில் இருந்தபடியே மருமகளிடம், 'குழந்தையை எடுத்துக்கொண்டு வாம்மா... வீட்டுக்கு போகலாம்' என்றார். இதைக்கேட்டு வெளியே வந்த பெண்ணின் தந்தை, 'உங்கள் வீட்டுக்கு எனது மகளை அனுப்ப முடியாது' என்று கூறினார்.

உடனே அந்த பெண்ணிடம் நாத்தனார், 'இப்ப வருவியா, மாட்டியா' என்று கேள்வி எழுப்பினார். இதனால் அவர்களுக்குள் பிரச்சனை ஆரம்பித்தது. கணவர் குடும்பத்தினரும், மனைவி குடும்பத்தினரும் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்து சண்டை போட்டனர்.

படகில் நின்றபடியே சண்டை போட்டதால் படகை ஓட்டி சென்றவர் பரிதாபமாக தவித்தார். படகை விட்டு இறங்குமாறும், வேறு இடத்தில் மீட்பு பணிக்கு செல்ல வேண்டும் என்றும் கூறினார். ஆனால் அதை கண்டு கொள்ளாத அவர்கள் தொடர்ந்து சண்டை போட்டுக்கொண்டே இருந்தனர்.

இதற்கிடையே அந்த பச்சிளம் குழந்தையின் தந்தையோ, குழந்தையை எப்படியாவது அழைத்து சென்று விடலாம் என்று அமைதியாக நின்றபடியே பாசப்போராட்டம் நடத்தினார். ஒரு கட்டத்தில் நாத்தனார் கடும் ஆத்திரம் அடைந்து, 'இந்த பெண்ணே வேண்டாம். நாம் வீட்டுக்கு போவோம்' என்று சகோதரனை அழைத்தார். அதன்பிறகு சண்டை உச்சத்தை எட்டியது.

இதனால் பெண் வீட்டார், கணவர் குடும்பத்தினரை அடிக்க பாய்ந்தனர். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த படகோட்டி கணவர் குடும்பத்தினருடன் படகை அங்கிருந்து ஓட்டி சென்றார். இதன் மூலம் அவர்களுக்குள் ஏற்பட இருந்த அடிதடி சண்டை தடுக்கப்பட்டது.

வேளச்சேரியை சேர்ந்த அந்த வாலிபருக்கும், பள்ளிக்கரணை சாய் பாலாஜி நகரை சேர்ந்த அந்த பெண்ணுக்கும் திருமணம் முடிந்ததில் இருந்தே இந்த இரு குடும்பத்தினருக்கும் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அந்த பெண் பிரசவத்துக்காக தனது தாய் வீட்டுக்கு சென்றார். கடந்த 3 வாரங்களுக்கு முன்புதான் அவருக்கு குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் அவர்களின் வீட்டை வெள்ளம் சூழ்ந்ததால் தனது குழந்தையை பத்திரமாக மீட்டு அழைத்து வருவதற்காகத்தான் தந்தை, தனது குடும்பத்தினருடன் சென்றார். தனது மனைவியையும், குந்தையையும் பத்திரமாக வீட்டுக்கு அழைத்துவர பாசப்போராட்டம் நடத்தினார். ஆனால் குடும்ப உறுப்பினர்களின் சண்டையாலும், புயல் தாக்கத்தையும் மிஞ்சிய குடும்ப பிரச்சனையாலும் வெள்ளத்தில் சிக்கிய குழந்தையை அழைத்து வர முடியாமல் போய் விட்டது.

Tags:    

Similar News