தமிழ்நாடு

வருகிற பாராளுமன்ற தேர்தலில் கிங் மேக்கராக எடப்பாடி பழனிசாமி இருப்பார்- ஆர்.பி.உதயகுமார் பேட்டி

Published On 2023-10-29 08:15 GMT   |   Update On 2023-10-29 08:15 GMT
  • ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
  • தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது என்பதற்கு இதுவே எடுத்துகாட்டாகும்.

மதுரை:

தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்க அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை (திங்கட்கிழமை) காலை மதுரை வருகிறார். அதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. அம்மா பேரவை சார்பாக வலையங்குளம் டோல்கேட் அருகே சீருடை அணிவகுப்பு மரியாதை நடைபெறுகிறது. இதன் முன்னேற்பாடாக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அணிவகுப்பு ஒத்திகை இன்று நடந்தது.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேசியமும், தெய்வகமும் இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்த பசும்பொன் முத்து ராமலிங்க தேவரின் குரு பூஜையை முன்னிட்டு, வீர அஞ்சலி செலுத்த எடப்பாடி யார் வருகிறார். எடப்பாடி யார் முதலமைச்சராக இருந்தபோது தேவர் குரு பூஜை விழாவின் போது எதிர்க்கட்சிகள், சமய தலைவர்கள், பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார். அதேபோல் தற்போதும் பாதுகாப்பான ஏற்பாடுகளை முதலமைச்சர் செய்வார் என்று மக்கள் நம்புகிறார்கள்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது என எடப்பாடியார் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. ஆனால் டி.ஜி.பி. அலுவலகம் வெளியிட்ட சி.சி.டி.வி. காட்சியில் அந்த நபர் பெட்ரோல் குண்டை பொருத்தி அதை வீசும் காட்சி வெளியிடப்பட்டது.

இப்படி சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. அதுமட்டுமல்ல கம்யூனிஸ்ட் அலுவலகத்திலும் பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர். தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது என்பதற்கு இதுவே எடுத்துகாட்டாகும்.

வரும் பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய ஆதரவை எடப்பாடியாருக்கு மக்கள் வழங்குவார்கள். அரசியல் கிங் மேக்கராக எடப்பாடியார் விளங்குவார். கால சக்கரம் சூழல்கிறது, அதற்கு ஏற்றாற்போல் எடப்பாடியாருக்கு என்ன பதவி என்பதை மக்களே தீர்மானிப்பார்கள். வருகின்ற பாராளுமன்ற தேர்தலின் மூலம் இந்திய ஆளுமைகளின் கிங் மேக்கராக எடப்பாடியார் திகழ்வார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News