தமிழ்நாடு

திருவொற்றியூரில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு: 5 ஆண்டாக டிமிக்கி கொடுத்த காளை மாடு சிக்கியது

Published On 2023-08-23 09:28 GMT   |   Update On 2023-08-23 09:28 GMT
  • போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றிவந்த காளை மாட்டை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
  • திருவொற்றியூர் பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

திருவொற்றியூர்:

திருவொற்றியூர், பெரியார்நகர் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக பெரிய காளை மாடு ஒன்று நெடுஞ்சாலையில் சுற்றி வந்தது. சாலையில் செல்லும் வாகனங்கள், மாநகர பஸ்களை மறித்து நிற்பது வாடிக்கையாக இருந்தது.

இதனால் வாகன ஓட்டிகள் தொடர்ந்து அவதி அடைந்து வந்தனர். மேலும் விபத்தில் சிக்குவதும் நீடித்து வந்தது. இதையடுத்து போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றிவந்த காளை மாட்டை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

மாநகராட்சி ஊழியர்கள் பிடிக்க வரும்போது அந்த காளைமாடு டிமிக்கி கொடுத்து தப்புவது வாடிக்கையாக இருந்தது. இதனால் கடந்த 5 ஆண்டுகளாக அந்த காளைமாடு சாலையில் "ஹயாக"சுற்றி அனைவருக்கும் போக்கு காட்டியது.

இந்த நிலையில் மண்டல சுகாதார அலுவலர்கள் அன்பழகன், சீனிவாச பாலகிருஷ்ணன் சுகாதார ஆய்வாளர் கார்த்திகேயா ஆகியோர் மேற்பார்வையில் சென்னை மாநகராட்சி பணியாளர்கள் 10 பேர் இன்று காலை பெரியார் நகரில் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த அந்த பெரிய காளை மாட்டை சுற்றி வளைத்தனர்.

அவர்களுக்கு டிமிக்கி கொடுத்து தப்ப முயன்ற போது காளை மாட்டை கயிறு கட்டி லாவகமாக பிடித்தனர். பின்னர் அதனை டிராலி மூலம் லாரியில் ஏற்றி பெரம்பூரில் உள்ள கால்நடை காப்பகத்திற்கு கொண்டு சென்றனர். இதனால் திருவொற்றியூர் பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

Tags:    

Similar News