தமிழ்நாடு

சென்னையில் 81 சதவீதம் பேருக்கு வைட்டமின்-டி சத்து குறைபாடு- ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Published On 2023-01-30 07:58 GMT   |   Update On 2023-01-30 07:58 GMT
  • நமது உடலில் வைட்டமின் டி சத்து மிகவும் முக்கியம் ஆகும்.
  • முட்டையின் மஞ்சள் கரு, மீன், இறைச்சி மற்றும் சத்தான உணவுகள் போன்றவை வைட்டமின் டி பற்றாக்குறையைத் தடுக்க உதவும்” என்றார்.

சென்னை:

நமது உடலில் 'வைட்ட மின் டி' சத்து மிகவும் முக்கியம் ஆகும். இது குறையும் போது மனச்சோர்வு, நீரிழிவு நோய், டிரோஸ்டேப்ம் புற்றுநோய், எலும்புகள் சம்பந்தப்பட்ட பாதிப்பு, முடக்குவாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்களின் பாதிப்புடன் தொடர்பு ஏற்படுகிறது.

இந்த வைட்டமின் குறைபாடு குறித்து சமீபத்தில் தனியார் நிறுவனம் ஒன்று ஆய்வு செய்தது. இது தொடர்பாக 27 நகரங்களில் 2.2 லட்சம் மக்களிடம் பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் சென்னையில் 81 சதவீதம் பேருக்கு 'வைட்டமின்-டி' குறைபாடு இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. இந்திய மக்கள் தொகையில் சுமார் 76 சதவீதம் பேர் 'வைட்டமின் டி' குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தனியார் நிறுவனத்தின் ஆய்வு அறிக்கையின் படி 79 சதவீத ஆண்களுக்கு குறிப்பிட்ட அளவைவிட குறைவாக இந்த சத்து குறைபாடு இருக்கிறது. இது பெண்களுக்கு 75 சதவீதமாக உள்ளது.

தேசிய சராசரியுடன் ஒப்பிடும் போது தற்போது இளைஞர்கள் அதிக அளவில் 'வைட்டமின் டி' குறைபாட்டால் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டு உள்ளது.

இதில் 25 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 84 சதவீதம், 25 வயது முதல் 40 வயது வரை 81 சதவீதமாக பாதிப்பு உள்ளது.

நகரங்களின் அடிப்படையில் வதோரா (89 சதவீதம்), சூரத் (88 சதவீதம்) நகரங்கள் பாதிப்பில் முதல் இடங்களில் உள்ளன. டெல்லியில் வைட்டமின் டி குறைபாடு சதவீதம் 72 ஆக இருக்கிறது. இதில் சென்னை (81 சதவீதம்) 10-வது இடத்தில் உள்ளது.

மாறி வரும் உணவு பழக்க வழக்கம், வாழ்க்கை முறை முட்டை, மீன் உள்ளிட்டவை உணவில் அதிகம் சேர்க்காததால் இந்த 'வைட்டமின் டி' குறைபாடு ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இது தொடர்பாக டாக்டர் ஒருவர் கூறும் போது,

"சூரியனில் இருந்து வரும் யு.வி.-பி கதிர்வீச்சு வெளிப்படும் போது, அது வைட்டமின் டி ஆக மாறுகிறது. மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்களும், சூரிய ஒளியை போதுமான அளவு உடலில்படும் அளவுக்கு இல்லாத வாழ்க்கை முறையும் வைட்டமின் டி குறைபாடுக்கு காரணம் ஆகும்.

இதில் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். சத்தான தானியங்கள், முட்டை, மீன்கள் போன்ற வைட்டமின் டி அதிகம் கொண்ட உணவுகளை குறைந்த அளவு உணவில் சேர்ப்பதும் காரணமாக இருக்கலாம். சூரிய ஒளியில் பருவகால மாறுபாடுகளும் காரணம் ஆகும்.

வைட்டமின் டி குறைபாடு பெண்களின் கர்ப்பம், தாய் மற்றும் குழந்தைக்கு உடல் நிலையை மோசமாக்க வழிவகுக்கும். 6 மாதங்களுக்கு ஒருமுறை அல்லது வருடத்திற்கு ஒரு முறையாவது வைட்டமின் டி அளவை வழக்கமான முழு உடல் பரிசோதனைகளுடன் சேர்த்து பரிசோதிக்க வேண்டும்.

65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் குறைந்த சூரிய ஒளியில் இருப்பவர்கள் வைட்டமின் டி குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். முட்டையின் மஞ்சள் கரு, மீன், இறைச்சி மற்றும் சத்தான உணவுகள் போன்றவை வைட்டமின் டி பற்றாக்குறையைத் தடுக்க உதவும்" என்றார்.

Tags:    

Similar News