இந்து கோவில்களுக்கு சொந்தமான 1,00,001-வது ஏக்கர் நில அளவீடு செய்யும் பணி- தொடங்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு
- இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்களின் பரப்பு 5,42,429.32 ஏக்கர் ஆகும்.
- வருவாய்துறை ஆவணங்களோடு முழுமையாக ஒத்துப்போகும் நிலங்களின் பரப்பு 3,43,000 ஏக்கர் ஆகும்.
இந்து சமயஅறநிலையத் துறையின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்து எல்லை கற்கள் பதிக்கும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது.
அவ்வகையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் 1,00,001-வது ஏக்கர் நில அளவீடு செய்யும் பணியினை தொடங்கி வைத்து, எல்லை கற்களை நட்டார்.
அதனை தொடர்ந்து நில அளவை பணிகளில் சிறப்பாக பணியாற்றிய குழுத் தலைவர்களான 20 மண்டலங்களின் நில அளவர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது:-
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்களின் பரப்பு 5,42,429.32 ஏக்கர் ஆகும், இதில் வருவாய் துறை ஆவணங்களோடு முழுமையாக ஒத்துப்போகும் நிலங்களின் பரப்பு 3,43,000 ஏக்கர் ஆகும். மீதியுள்ள நிலங்களின் பரப்பு 1,99,429.32 ஏக்கர் ஆகும்.
கோவில்களுக்குச் சொந்தமான நிலங்களை அளவீடு செய்வதற்கான முதல் நடவடிக்கையாக உரிமம் பெற்ற நில அளவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டு, 50 குழுக்களாக பிரிக்கப்பட்டு 20 மண்டல இணை ஆணையர்களின் நேரடி கட்டுப்பாட்டில் பணி அமர்த்தப்பட்டனர்.
கடந்த 8-ந்தேதி அன்று சென்னை மயிலாப்பூர் கற்பகாம்பாள் உடனுறை கபாலீசுவரர் கோவில் வளாகத்தில் டி.ஜி.பி.எஸ். கருவியின் மூலம் முதன் முதலாக நில அளவை செய்யும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.
எல்லைக் கற்களை அனைத்து இடங்களிலும் ஒரே வடிவத்தில் அமைத்திடும் வகையில் சிமெண்ட் பில்லர்களை தயாரித்து, அதற்கு வெள்ளை நிற வர்ணமும், அப்பில்லரின் ஒரு பக்கத்தில் எச்.ஆர்.சி.இ. என்ற ஆங்கில எழுத்துக்கள் வடிவமைக்கப்பட்டு அதில் சிவப்பு நிற வர்ணமும் தீட்டி அளவிடப்பட்ட நிலங்களில் பில்லர்கள் நடப்பட்டு வருகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்புலிவனம் வியாக்ரபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 972 ஏக்கர் நிலங்களை அளவீடு செய்யப்பட்டதன் மூலம் முதல் கட்டமாக 50,000 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யும் பணி நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து, பணிகள் விரைவுபடுத்தப்பட்டு 1,00,000 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யும் பணி நிறைவடைந்து, இன்றைய தினம் 1,00,001வது ஏக்கர் நிலத்தினை அளவீடு செய்து எல்லை கற்கள் நடப்பட்டது.
கோவில் நிலங்களை அளவீடு செய்யும் பணிகளில் இயற்கை இடர்பாடுகளுக்கிடையே சிறப்பாக பணியாற்றி இறைவனின் சொத்துக்களை காப்பாற்றியும், அடையாளம் காட்டியும், எல்லை கற்களை நட்டு பாதுகாத்து இருக்கின்ற 172 நில அளவர்களுக்கும், இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இப்பணி மிகப்பெரிய பணியாகும். அதனை கருத்தில் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 172 நில அளவர்களுக்கு வழங்கப்படுகின்ற ஊதியத்தை ரூ.2,000 உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார். அறிவிக்கப்பட்ட கூடுதல் ஊதியம் பிப்ரவரி மாதத்தில் இருந்து வழங்கப்படும்.
2023-ம் ஆண்டிற்குள் ஒரு லட்சம் என்பதை 2 லட்சம் ஏக்கராக அளவீடு செய்து உயர்த்தி காட்டுங்கள். உங்களுக்கு கூடுதலாக ஊக்கத் தொகை காத்துக் கொண்டிருக்கிறது
இவ்வாறு அவர் பேசினார்.